The Hon’ble CM VC-The Hon’ble Rural Development, Food and Civil Supply Ministers – Medical

செ.வெ.எண்:-08/2025
நாள்:-03.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் குத்துவிளக்கேற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(03.07.2025) தொடங்கி வைத்தார். அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடலுார்பன்றிமலை மற்றும் மார்க்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொடைக்கானல் அப்சரவேட்டரியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுகாதாரத்துறையும், கல்வித்துறையும் தனது 2 கண்கள் என்று கூறி இந்த இரண்டு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் ரூ.47,000 கோடி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சுமார் ரூ.8,000 கோடி, சுகாதாரத்துறைக்கு சுமார் ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அந்த வகையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்க்கம்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு மருந்தகம், வைப்பறை, தொற்று நோய் பிரிவு, மருத்துவர் அறை, ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு, கட்டு கட்டும் அறை, ஊசி செலுத்துமிடம், பிரசவ அறை, பிரசவ வார்டு மற்றும் மாற்றத்திறனாளிகள், ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக இடத்தை திருமதி நாச்சம்மாள் ராமசாமி, திரு.தண்டபாணி, திருமதி கோமதி ஆகியோர் தானமாக வழங்கியுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சுமார் 2.50 கோடி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரத்த அழுத்தம். நீரிழிவு போன்ற நோய்களுக்கான மருந்துகள் வீடு தேடிச் சென்று வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.50 கோடி நபர்கள் பயனடைந்து வருகின்றனர். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், யாராவது விபத்தில் சிக்கி காயமடைந்தால் அவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை ரூ.2.00 இலட்சம் வரை அரசு ஏற்கும். இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 730 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 3.00 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அவற்றை தீர்க்க 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 20 இலட்சம் லேப்டாப் வழங்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு 2 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
மார்க்கம்பட்டி ஊராட்சியில் இந்த 50 மாதங்களில் மட்டும் 375 பணிகள் சுமார் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர்(பழனி) மரு.அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.