Close

The Hon’ble Co op Minister and The Hon’ble Food Minister

Publish Date : 30/07/2021
.

செ.வெ.எண்:-57/2021

நாள்:-30.07.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள்,
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் ஆகியோர்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மனுக்களுக்கு ஆணைகள்,
1700 அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.26.22 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, 5,785 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆணைகள் வழங்கும் விழா மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(30.07.2021) நடைபெற்றது.

இவ்விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் மற்றும் இதர 17 நலவாரியங்களில் பதிவு பெற்றுள்ள 50,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி அனைத்து மாவட்டங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் 2006-2011-ல் 13 லட்சம் பேருக்கும் அவர்கள் வசிக்கும் இடம் பட்டா வழங்கப்பட்டு அவர்களுக்கே உரிமையாக்கப்பட்டது. கிராமங்களில் மட்டுமின்றி நகரப் பகுதிகளிலும் சொந்த நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. உள்ளாட்சித்துறையில் உன்னதமான நிர்வாகத்தினை அன்றைய துணை முதலமைச்சராக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி ‘உங்கள் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாக தினம்தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பல்வேறு பணிகள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அரசுப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது என்பதற்கு இதுவே நற்சான்றாகும். இந்தப் பணி தொடரும். இது ஒரு பொற்கால ஆட்சி ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற திட்டத்தில் 1845 மனுக்கள் பெறப்பட்டதில் 891 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 266 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. நிராகரிக்கப்பட்ட 668 மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அதிகளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டன. கூட்டுறவு சங்கம், வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சுயஉதவிக்குழுவினருக்கு கடன்;, விவசாயக் கடன், சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்பேரில், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை கேட்டு 19,819 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 29.07.2021 வரை 17,746 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன, 2,073 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. தற்போது 10,958 குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப்பெற்றுள்ளன. இந்தப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இது உங்கள் அரசு, இது மக்கள் அரசு, இது நேர்மையான அரசு, இது வெளிப்படை தன்மையான அரசு… இந்த ஆட்சியில் அனைத்துப் பணிகளும் நேர்மையாக, வெளிப்படையாக இருக்கும். பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நேசக்கரம், அன்புக்கரம் நீட்டும் அரசு. பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உதவிக்கரம் நீட்டும் கரங்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கரங்கள் உள்ளன.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் மற்றும் இதர 17 நலவாரியங்களில் பதிவு பெற்றுள்ள 1,700 தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் என ரூ.26.22 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டில் 2,00,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.13.78 கோடி மதிப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 25.06.2021 அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 5,785 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திருச்சி, அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசி செலுத்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக தொழிலாளர் உதவி ஆணையர் (சபாதி) அலுவலக வளாகம், திண்டுக்கல், அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, வடமதுரை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேடசந்தூர், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனி, தொழிலாளர் உதவி ஆணையர்( தோட்ட நிறுவனங்கள்) அலுவலகம், வத்தலகுண்டு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, கொடைக்கானல் ஆகிய 6 இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமானம் மற்றும் இதர அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன் கருதி, பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு சமர்ப்பித்தல் ஆகிய பணிகளை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களது விபரங்களை இவ்விணையதளத்தில் Updation செய்து கொள்ள வேண்டும்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் மற்றும் சமூக பாதுகபாப்பிற்காக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நலவாரியங்களின் கீழ் கட்டுமானம், தெரு வியாபாரம், மண்பாண்டம் செய்தல், தையல், போன்ற 114 வகையான தொழில்கள் செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,64,821 தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா உள்ளிட்ட 18 நல வாரியங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நலவாரியங்களின் கீழ் பதிவு செய்தல், புதுப்பித்தல், உதவித்தொகைகள் பெறுதல் போன்ற சேவைகள் கட்டணம் ஏதுமின்றி மேற்கொள்ளப்படுகின்றன.

பதிவு பெற்ற அமைப்புசாரா நல வாரியத் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு கண்கண்ணாடி இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரணம், விபத்து இழப்பீடு, ஒய்வூதியம், பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,75,650 பயனாளிகளுக்கு ரூ.82,14,89,610 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்த 10,252 தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் விடுபட்ட வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு 7 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வரும் ஆக.1-ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் பொருட்கள் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதியில் இருந்து வழங்கப்பட்ட இசைக் கருவிகளை பார்வையற்றோர் இசைக்குழுவினருக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோவிந்தராசு, திண்டுக்கல், தொழிலாளர் இணை ஆணையர் திரு. என்.கோவிந்தன், திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(ச.பா.தி) திருமதி ஜீ.சிவசிந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.பிரபாகர், உதவி ஆணையாளர் (கலால்) திரு.சிவக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.பழனிக்குமார், துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ராஜசேகர், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.