The Hon’ble Co-op Minister (Chinnalapatti Inspection)

செ.வெ.எண்:29/2021
நாள்:18.07.2021
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் சின்னாளபட்டியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம், சாயப்பட்டறைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம், சாயப்பட்டறைகள் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் இன்று(18.07.2021) ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் குடிசைத்தொழிலாக தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
சின்னாளபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுங்குடி சேலை மற்றும் சாயத் தொழிலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும், ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் இயங்கி வந்த சாயப்பட்டறைகள் சட்ட விதிகளின்படி தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமன்றத்தில் நான் பேசும்போது, தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடி நிதியில் சின்னாளபட்டியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது.
சின்னாளபட்டி சாயத்தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் இந்தப் பகுதிக்கு வந்தபோது சாயப்பட்டறை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து சாயத்தொழில் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர், சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள் சார்பில் ஆய்வு மேற்கொண்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு இடம் போதிய அளவு இல்லாதபட்சத்தில் தனியாரிடம் இடம் பெற்று சாயத்தொழிலாளர் பிரச்னைக்கு இந்த மக்கள் நலன் அரசு, மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தலைமையிலான மக்களாட்சி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக 24 மணிநேரமும் அயராது உழைத்து வருகிறார். இதுவரை 1.60 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தினமும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இன்னும் 5 மாதங்களில் மேலும் 1.5 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அவருடைய நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. கடந்த 2 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
வனப்பகுதியில் உள்ள யானைகள், ஆடலூர், பன்றிமலை பகுதியில் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொங்கு மின் வேலிகள் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களை இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள அழைத்துள்ளேன். அமைச்சர் அவர்களுடன் ஆலோசித்து இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். விளைபயிர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோவிந்தராசு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி காசிசெல்வி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்டப்பொறியாளர் திரு.சந்திரசேகரன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.ஸ்ரீதர், சின்னாளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கலையரசி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.