Close

The Hon’ble Co-op Minister Function (Corona relief Temple workers)

Publish Date : 29/06/2021
.

செ.வெ.எண்:36/2021

நாள்:28.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் 188 திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 16 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று (28.06.2021) 188 திருக்கோயில் பணியாளர்களுக்கு, கொரோனா நிவாரணமாக ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 16 வகையான மளிகை பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மக்களுக்கான ஆட்சியை தலைவர் கலைஞர் வழியில் சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் கோயில்களுக்கென புதிய சட்டத்தை உருவாக்கினார்கள். அந்த ஆட்சியின் தொடர்ச்சி தான் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற வகையில் திருக்கோயில்களில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தார். கோயில்களுக்கு அதிக குடமுழுக்குகள் நடத்தி வைத்தார். வருவாய் இல்லாத கோயில்களில் ஒரு கால பூஜை நடத்துவதற்கும், கோயில் பூசாரிகள் மாநாடு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் டாக்டர் கலைஞர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கொரோனா தடுப்பு பணிகளை அயராது மேற்கொண்டு வருகிறார். எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும், கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர் தமிழக முதலமைச்சர் ஆவார்.

தமிழக மக்களுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றவுள்ள திட்டங்களை கடைகோடியில் உள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்கின்ற பணிகளை மாவட்ட நிர்வாக அலுவலர்கள் அனைவரும் சிறப்பான முறையில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்தப்பணியில் நானும் இணைந்து செயல்படுவேன். ஒவ்வொரு துறையின் நோக்கத்தை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பேன்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால் திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், திருக்கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.

திருக்கோயில் ஊழியர்களின் கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி உட்பட 16 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டு, நிவாரண உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி வசதியுள்ள 149 திருக்கோயில்களும், நிதி வசதி குறைவாக உள்ள 1511 திருக்கோயில்களும் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 155 கிராமக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கும் மற்றும் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இல்லாத 33 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர், பூசாரிகள் மற்றும் பங்குத்தொகை பெறும் பணியாளர்களுக்கும் என மொத்தம் 188 பயனாளிகளுக்கு கொரோனா தொற்று நோய் காரணமாக வாழ்வாதாரம் இன்றி சிமப்படுவதை கருத்தில் கொண்டு உதவித்தொகை ரூ.4000 மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 16 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 456 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் ஒரு துளி கூட விட்டுக்கொடுக்காமல் மீட்கப்படும். அனைத்துத்தரப்பு மக்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு உறுதுணையாக இருக்கும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, உதவி ஆட்சியர் திருமதி பிரியங்கா, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் திருமதி அனிதா மற்றும் கோயில் செயல் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.