Close

The Hon’ble Co-op minister -Makkalai Thedi Maruthuvam

Publish Date : 05/08/2021
.

செ.வெ.எண்:-09/2021

நாள்:-05.08.2021

“திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 6 இலட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”
நிலக்கோட்டை வட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தின் கீழ் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கி தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்திற்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று(05.08.2021) துவக்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி (இயன்முறை சிகிச்சை) மற்றும் வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, பல்வேறு பரிசோதனைகள் ஆகியவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் இன்று(05.08.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவ கண்காட்சியை பார்வையிட்டு, அப்பகுதி பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகளை வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கின்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக தேர்தல் நேரத்தில் தாம் அறிவித்த வாக்குறுதிகளையும், தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள். மேலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார்கள். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். எந்தவித லாப நோக்கத்துடனும் இல்லாமல் பொதுமக்களின் நலன் கருதி, மக்களாட்சி அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில், சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சிற்றுந்துகள்(மினி பஸ்கள்) இயக்கம் தொடங்கப்பட்டன. அதனடிப்படையில், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

சாதாரண மக்களின் கோரிக்கைகளையும் கவனித்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளும் அரசாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு உள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்களிடையே, உயர் இரத்த அழுத்தநோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவம் வழங்கும் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தினை இன்று துவங்கி வைத்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் நிலக்கோட்டை வட்டாரம், அம்மையநாயக்கனூரிலும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த வடமதுரை வட்டாரத்திலும் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் அனைவருக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று இரத்தம், சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. வீடுகளில் 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 வகையான நோய்கள் உதாரணமாக சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், காசநோய், தொழுநோய், சிறுநீரக நோய், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் மற்றும் மனநல நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வேறு ஏதேனும் மருத்துவ சேவை தேவைப்படும் பட்சத்தில் அவற்றை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் தவிர வட்டாரத்திற்கு ஒரு இயன் முறை சிகிச்சை செய்பவா (Physiotherapist) வலி மற்றும் நோய் ஆதரவு சேவை செய்யும் செவிலியர்கள் (Palliative Care Staff Nurse) ஆகியோர் மற்றும் அவர்களுக்கென தனி வாகனமும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வட்டாரம் முழுவதும் சேவை தேவைப்படுவோருக்கு வீடு தேடி சென்று ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளையும் வழங்க உள்ளனர். இதேபோல் சிறுநீரக கோளாறு அதாவது டையாலிசிஸ் சிகிச்சை முறைக்கு தேவையான திரவ பைகளும் வீடு தேடி சென்று வழங்கப்பட உள்ளது.

இத்திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக ஒரு முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மக்களை தேடி மருத்துவ திட்டம் நடமாடும் மருத்துவக்குழு மற்றும் பள்ளி சிறார் (RBSK) மருத்துவக்குழு மூலமாகவும் மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது. எனவே இந்த மருத்துவ சேவையினை அனைத்து நோயாளிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி நலம் பெற வேண்டும்.

கொரோனா பரவல் 3-ஆம் அலை வரும் என்கிறார்கள். அதை எதிகொள்ள தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நெருக்கத்தை தவிர்த்து, தூரத்தை கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அதிகளவில் செலுத்தும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 17 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் தடுப்பூசி செலுத்தி நமது மாவட்டத்தில், 100 சதவீதம் இலக்கை அடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் அம்மையநாயக்கனூரின் பழமையை பாதுகாக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. சிறுமலை அருவி நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இங்கிருந்து தண்ணீர் செல்லும் கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மகளிர் சுயஉதவிக் குழுக்களை தொடங்கி அதிகளவில் கடன் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப்பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தற்போதும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கல்விக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அறிவித்துள்ளார்கள்.

கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள 4000 காலிப்பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் தரமான பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.

கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கு வேளாண் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் சிறு வணிகர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் பணிக்கு மட்டுமின்றி, சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கும் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டு பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதே எனது முதல் பணியாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி காசிசெல்வி, துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) மரு.கோ.பூங்கோதை, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திருமதி நளினி, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.தனுஷ்கோடி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி ஜெயலட்சுமி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,திண்டுக்கல்.