Close

The Hon’ble Co op minister- Manjalar Dam water release

Publish Date : 16/10/2021
.

.செ.வெ.எண்:-33/2021

நாள்:15.10.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில், சுமார் 5,259 ஏக்கர் விவசாய நிலம் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ராமகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்க.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சுமார் 5,259 ஏக்கர் விவசாய நிலம் பாசனத்திற்காக தேனி மாவட்டம், மஞ்சளாறு அணையில் இருந்து இன்று(15.10.2021) தண்ணீர் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க மஞ்சளாறு அணையில் இருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மஞ்சளாறு ஆற்று பாசனம், பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 3,386 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதமும் மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 1,873 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வினாடிக்கு 40 கன அடி வீதமும் என மொத்தம் 5,259 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் வகையில் மஞ்சளாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கணவாய்ப்பட்டி, வத்தலகுண்டு, குன்னுவராயன்கோட்டை மற்றும் சிவஞானபுரம் ஆகிய கிராமப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி மற்றும் ஜி.கல்லுப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க, விவசாயிகள் குறிப்பிட்ட காலத்தில் சாகுபடி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே, மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதன்படி, இன்று பாகனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணையில் மொத்த உயரம் 57 அடி, அணையின் கொள்ளளவு 487.35 மில்லியன் கன அடி, மொத்த பாசன பரப்பு 5,259 ஏக்கர், இதில் பழைய ஆயக்கட்டு

3,386 ஏக்கர், புதிய ஆயக்கட்டு(வலது பிரதான கால்வாய்) 1,873 ஏக்கர், தேனி மாவட்ட பாசன பரப்பு 3,148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்ட பாசன பரப்பு 2,111 ஏக்கர் ஆகும். மஞ்சளாறு அணையில் இன்று(15.10.2021) காலை நிலவரப்படி, நீர்மட்டம் 55 அடி, நீர் கொள்ளளவு 435.32 மில்லியன் கன அடி, அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 60 கன அடியாக உள்ளது.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாலோசித்து, தண்ணீர் பங்கீடு முறையை தொடர்ந்து மேலாண்மை செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து, சோத்துப்பாறை அணையிலிருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான், சோத்துப்பாறை அணையில் பாறைகள் வெட்டி அகற்றப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, அணையின் கரைகள் உயரம் அதிகரிக்கப்பட்டு, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகாலத்தில், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். பல்வேறு கோரிக்கை, போராட்டங்கள் நடத்தியே பாசனத்திற்காக தண்ணீர் பெற்று வந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. பாசனத்திற்கு வழக்கமாக தண்ணீர் திறப்பதற்கான குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே, தற்போது தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தாற்போல் உள்ளது. விவசாயிகள் அனைவரும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும். கடைக்கோடி பகுதிக்கும் தண்ணீர் சென்று விவசாயம் மேம்பாடு அடையவும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது, மின்துறையில் வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பில் ஒளிவு மறைவின்றி, வெளிப்படைத்தன்மையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 9 நபர்களுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், பெரியகுளம் உதவி ஆட்சியர் திரு.சி.ஏ.ரிஷப், இ.ஆ.ப., செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எல்.மூக்கையா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.