Close

The Hon’ble Co-op minister -Marriage fund and gold distribution

Publish Date : 01/07/2021
.

செ.வெ.எண்:-44/2021

நாள்:-30.06.2021

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் கடனுதவி வழங்க நடவடிக்கை – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சி விஜய மஹாலில் இன்று(30.06.2021) ஏழை பெண்கள் திருமணத்திற்கு நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கின்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி வருகின்றார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். பெண்களுக்கு சமத்துவம் என்ற நிலை உருவாக்க கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பாடுபடும். தமிழ்நாட்டில் பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலில் செயல்படுத்தியது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். அதோடு மட்டுமின்றி பெண்களுக்காக அதிகளவில் திட்டங்களை செயல்படுத்தினார்.

மேலும், அரசு வேலையில் இல்லாத பெண்கள் பிறரை சார்ந்து இருக்காமல் தன் சுயசார்புடன் வாழ்க்கையில் மேம்பட மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்பட வைத்தார். இதுபோன்று பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2000 கோடி வரை கடன் வழங்கப்பட்டது. அதன்பின்னர் வந்த ஆட்சியாளர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தொகையை குறைத்துவிட்டனர். தற்போது மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கூட்டுறவுத்துறை மூலம் அதிக அளவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சின்னாளப்பட்டி பகுதியில் நெசவுத்தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கு வசிக்கும் நெசவுத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்தப் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட நான் அமைச்சராக இருந்த காலத்தில் இங்குள்ள இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வீடு கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் வந்த ஆட்சியாளர்கள் அதை ரத்து செய்துவிட்டனர். தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. அதனால் வீடு கட்டும் திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதே எனது முதல் பணியாக இருக்கும். இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் எனக்கு சகோதர, சகோதரிகள். அவர்கள் வாழ்வில் மேம்பட அனைத்து அரசுத் திட்டங்களையும் அவர்களுக்கு கொண்டு சேர்ப்பேன். கொரோனா காலமாக இருப்பதால் என்னை சந்திப்பதில் இடர்பாடுகள் ஏற்படலாம். நானே விரைவில் உங்களைத் தேடி வீடுவீடாக வந்து சந்திப்பேன். இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொண்டு உங்கள் சேவகனாக இருப்பேன். தற்போது நடப்பது மக்களுக்கான ஆட்சி. இந்த மக்களாட்சியில் அரசின் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்கும் என உறுதியளிக்கிறேன் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய விழாவில் 100 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம், 72 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, திருமண உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி காசிசெல்வி, சமூகநல அலுவலர் திருமதி புஷ்பகலா, சின்னாளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கலையரசி, மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி மகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.