Close

The Hon’ble Co-op minister with minority minister and food minister-refugees camp inauguration

Publish Date : 10/12/2021
.

..

செ.வெ.எண்:-28/2021

நாள்:-10.12.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்படவுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அடிக்கல் நாட்டி, இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, தமிழகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வசிக்கின்ற 106 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு, தமிழக அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் நேரடியாக சென்று, முகாம்களில் வசிப்பவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முகாம்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முகாம்களில் வசிப்பவர்களின் தேவைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்களை ஒருங்கிணைத்து, தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் புதியதாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க ஆணைபிறப்பித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(10.12.2021) நடைபெற்ற விழாவில், தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்து, இலங்கை தமிழர்களுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இலங்கை அகதிகள் முகாமிற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும்வகையில் அவர்கள் நலனுக்காக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் தற்பொது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கை தமிழர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் 120 நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவித்து பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவது, தமிழக அரசின் செயல்பாட்டு திறனை காட்டுகிறது. அந்த அளவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை நிறைவேற்றுவதில் உறுதியோடு செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் அனைத்துத் திட்டங்களும், அனைத்து தொகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் பணிகள் தொடரும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கி, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆட்சியாளர்கள் யாரும் செய்திடாத அளவிற்கு பல திட்டங்களை அறிவித்து அந்த திட்டங்களை அனைத்து பொதுமக்களை சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எல்லா தரப்பு மக்களையும் பாதுகாக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கிறார்கள். தேர்தலின்போது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்று தருவதற்கான முயற்சியினை மேற்கொள்வார். மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடமும் இது குறித்து வலியுறுத்தியுள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தெரிவித்ததாவது:-

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில், இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சனை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்களை டாக்டர் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு, பாதுகாத்து தமிழத்தில் 106 முகாம்களை அமைத்து அவர்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டிக்கொடுத்தார்கள்.

அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பொறுப்பேற்றவுடன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, தமிழகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வசிக்கின்ற 106 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முகாம்களில் வசிப்பவர்களுக்கு, நிரந்தரமான வீடுகள், குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 7,469 வீடுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 3,510 வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு செய்து. வீடுகள் கட்டும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூரில் தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, இந்தத்திட்டம் பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்களை ஒருங்கிணைத்து, தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்டி புதியதாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.4.75 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. மேலும், சுகாதார வசதி, சாலை வசதி என உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்க ரூ.30 கோடி நிதி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கும் நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகளுடன் புதியதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள அரண்மனை குளம் ஆகியவற்றை பார்வையிட்டார்கள்.

விழாவில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு வக்பு வாரியம் முதன்மை செயல் அலுவலர் மற்றும் சொத்து அலுவலர் டாக்டர் பரிதாபானு, திண்டுக்கல் வருவாய் அலுவலர் திருமதி ம.காசிசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) திரு.ந.சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன், துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.வீ.பழனிகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.சு.சண்முகம், வட்டாட்சியர்கள் திருமதி சந்தனமேரி கீதா, திரு.தசவர்தன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.