The Hon’ble Co-op minister with Minority minister-refugees camp inspection

செ.வெ.எண்:-43/2021
நாள்:-30.06.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, கோபால்பட்டி மற்றும் அடியனூத்து ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.கே.எஸ்.செஞ்சிமஸ்தான் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.கே.எஸ்.செஞ்சிமஸ்தான் அவர்கள் ஆகியோர் இன்று(30.06.2021) பார்வையிட்டனர். இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுக்குப் பின்னர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தார்கள். அனைத்து மக்களுக்கும் சமமாக அரசின் திட்டங்கள் அனைத்தும் சேர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் வெளிநாடு வாழ் தமிழர்களான நமது சகோதர, சகோதரிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர், கழிப்பறைகள், உடை, உணவு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு வழங்குவதற்குதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த குறைதீர் கூட்டம் நடைபெற்று கொண்டியிருக்கிறது. இங்கு முகாமில் வசிக்கும் பொதுமக்களுக்கு எல்லா வகையிலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், “தேர்தல் நேரத்தில் தளபதியார் மு.க.ஸ்டாலின் தான் வருவார் உங்களுக்கௌளாம் நல்ல ஆட்சி தர போகிறார்” என்ற செய்தியை முன்னாலே கொடுத்தவர்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். அந்த நல்ல ஆட்சி, நல்ல காலம் உங்களுக்கு பிறந்திருக்கிறது நீங்கள் கேட்காமலேயே எப்படி டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து உதவிகளையும் செய்தாரோ, அதேபோல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள்.
இந்த முகாமில் வசிக்கும் அனைவரின் கோரிக்கை என்ன என்று அறிந்துள்ளேன். குறிப்பாக குடியுரிமை குறித்து கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளீர்கள் இது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்று தருவதற்கான முயற்சியினை மேற்கொள்வார். மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடமும் இது குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆரம்பமுதலே டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான் உங்கள் அனைவருக்கும் எல்லா உதவியும் கிடைத்தது. அதே போன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியிலும், அனைத்து உதவியும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர் அகதிகளுக்கு முதற்கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்குடியிருப்பில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சமுதாயக்கூடம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அடங்கிய குடியிருப்புகள் கட்டி வழங்கப்படவுள்ளது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.கே.எஸ்.செஞ்சிமஸ்தான் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, தமிழகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வசிக்கின்ற 108 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகிறோம். அதன்படி திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3 முகாம்களை ஒருங்கிணைத்து நிரந்தரமான குடியிருப்பு கட்டி வழங்குவதற்காக அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து, இலங்கை அகதிகளுக்கு நிரந்தரமாக வீடுகள் கட்டி வழங்கும் முதற்கட்ட பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18,000 பேர் வசிக்கின்றனர்.
அகதிகள் முகாம்களில் வசிப்பவர்கள் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளனர். மேலும், குடியுரிமை பெறுவது தொடர்பாகவும் பல்வேறு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மக்களுக்கான அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் அரசு செயல்படுவதால் அதனை உறுதிபடுத்தும் வகையில் இம்முகாம்களை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு இப்போதுதான் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று வக்பு வாரியத்தின் சொத்துக்கள் தொடர்ந்து கண்டறிந்து உடனுக்குடன் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. சுமார் 7000 சொத்துகள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பட்டியலிடப்பட்டுள்ளது. எந்தெந்த சொத்துக்கள் என்பது ஆன்லைனில் பார்த்தாலே அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பல்வேறு சொத்துக்கள் கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த இடங்கள் முழுமையாக அரசு, வக்பு வாரியம் கைப்பற்றி அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.கே.எஸ்.செஞ்சிமஸ்தான் அவர்கள் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, கோபால்பட்டி முகாமில் உள்ள வீடுகளை ஆய்வு செய்தனர். மேலும், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சிறுபான்மையினர் நலன் அரசு மாணவியர் விடுதியை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.கே.எஸ்.செஞ்சிமஸ்தான் அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆண்டிஅம்பலம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.விஜயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,திண்டுக்கல்.