Close

The Hon’ble Co-operative Minister-Authoor Meeting

Publish Date : 04/08/2022
.

செ.வெ.எண்:-08/2022

நாள்:03.08.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு, செம்பட்டி – கன்னிவாடி சாலையில் ஆத்தூர் பிரிவில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று(03.08.2022) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்;டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார். சுயஉதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் வைத்துள்ளவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசின் நலத்திட்ட உதவிகள் அதிகபடியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் கடன் என பல்வேறு வகையான கடனுதவிகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகள் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் ஆத்தூர் நீதி மன்றத்திற்கு விரைவில் நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்காக 4 கல்லூரிகள், பழனியில் ஒரு சித்தா கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட சுதநாயகிபுரத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 300 சேர்க்கை இடங்களுக்கு 2,100 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கல்லூரி தொடங்கிய முதலாம் ஆண்டிலேயே இந்தக் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.

திண்டுக்கல் காந்திகிராமத்தில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் சேர்ந்து உயர் கல்வி பயின்றனர். தற்போது இதுபோன்ற பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிமாநில மாணவ, மாணவிகளும் அங்கு சேரும் நிலை ஏற்பட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்ட ஏழை, எளிய மாணவ, மாணவிகள் அங்கு சேர்ந்து பயில போதிய இடவாய்ப்புகள் குறைந்துவிட்;டன. அதை ஈடு செய்யும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 6 கல்வி நிறுவனங்களை தொடங்க அனுமதியளித்துள்ளார்.

கிராமப்பகுதிகள் சூழ்ந்த இந்த பிற்பட்ட பகுதியில் தற்போது அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது, இந்தப் பகுதி மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கல்விச் செல்வம் என்பது அழியாச் செல்வம். இந்த கல்விச் செல்வத்தை ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் குழந்தைகள் பெற வேண்டும் என்பதே இந்த அரசின் நேக்கம். ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் குழந்தைகள் உயர்கல்வி பெற வேண்டும், நிதி பற்றாக்குறையால் அவர்களின் கல்லூரி கனவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே இந்த அரசின் லட்சியம்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார். இது ஏழை, எளிய மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயிகள் கறவை மாடுகள் வாங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

விவசாயம், கல்வி, விளையாட்டு, தொழில் என அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் திரு.சண்முகநாதன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் திருமதி ஹேமலதா மணிகண்டன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.சு.சரவணன், ஆத்தூர் வட்டார வளரச்சி அலுவலர்கள் திரு.தட்சிணாமூர்த்தி, திரு.ஏழுமலையான், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி பத்மாவதி ராஜகணேஷ், ஆத்தூர் கிராம ஊராட்சித்தலைவர் திருமதி ஜம்ருதிபேகம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.