Close

The Honb’le Coo op minister-Kuttathupatti

Publish Date : 14/12/2021
.

.

செ.வெ.எண்:38/2021

நாள்:14.12.2021

மாண்புமிகு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், குட்டத்துப்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்(2018-19)-ன் படி, ரூ.17.64 இலட்சம் மதிப்பீட்டில் குட்டத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், குட்டத்துப்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று(14.12.2021) திறந்து வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில், சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்கள். குறிப்பாக தேர்தல் நேரத்தில் தாம் அறிவித்த வாக்குறுதிகளையும், தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.

கொரோனாவை வீழ்த்துவதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த நடவடிக்கை உலக அளவில் சிறந்த முதலமைச்சர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுகின்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். சுயஉதவிக்குழுவிற்கு ரூ.2,761 கோடி கூட்டுறவுத்துறை கடன் தள்ளுபடி மற்றும் 5 பவுன் வரை தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தகுதியுடைய முதியோர் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீர் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். விவசாய நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை விவசாயிகள் அறிந்து நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கு வேளாண் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் சிறு வணிகர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் பணிக்கு மட்டுமின்றி, சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கும் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டு பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. நிலமில்லாதவர்களுக்கும் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றைடையச் செய்வதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியோடு உள்ளார்கள். இது மக்களாட்சி அரசு, குளறுபடி இல்லாத அரசு, மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்ப்பதில் கழக அரசு உறுதியோடு உள்ளது என மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், குட்டத்துஆவரம்பட்டியில் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பை திறந்து வைத்தார்கள். பின்னர் குட்டத்துப்பட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி ஆ.ஆரோக்கியசுதா செல்வி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் திருமதி இரா.சுமதி, திரு.பெ.திருப்பதி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.