Close

The Hon’ble Coop minister – 40 gram gold Jewelry loan waiver

Publish Date : 28/03/2022
.

செ.வெ.எண்:-49/2022

நாள்:26.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் பி.மேட்டுப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடி 2021 திட்டத்தின்படி, நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை பயனாளிகளுக்கு, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், பி.மேட்டுப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் இன்று(26.03.2022) பொது நகைக்கடன் தள்ளுபடி 2021 திட்டத்தின்படி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான பொது நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி, 700க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள்,வழங்கினார்.

விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க அதனைச் செயல்படுத்திடும் முகமாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 01.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 12,23,417 பயனாளிகள் கண்டறியப்பட்டு இத்திட்டத்தில் பயன்பெறவுள்ளர். அதில், இதுவரை 11 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.3,950 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இன்றும் 2 நாட்களில் தகுதியுள்ள அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டுவிடும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.208 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை, ரூ.148 கோடி மதிப்பிலான நகைக்கடன் சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில், அரசை குறுக்கு வழியில் ஏமாற்ற நினைத்தவர்களின் எண்ணங்கள் தடுக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் சென்றடைந்துள்ளது.

மேலும், கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி, சங்கங்கள் சிறப்பாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாய கடன் பெறாத விவசாயிகளுக்கும் வீடுதேடி சென்று கடனுதவி வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அனுமதி பெற்று விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் முதியோர் உதவித்தொகை வழங்குதல் மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் பேசினார்.

விழாவில், துணை மேயர் திரு.எஸ்.ராஜப்பா, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், சரக துணைப்பதிவாளர் திரு.முத்துக்குமார், மேலாண்மை இயக்குநர் ஜெபஸ்டியான், மத்திய கூட்டுறவு வங்கி முதல்நிலை வருவாய் அலுவலர் திரு.அன்புக்கரசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குநர் திரு.செல்வக்குமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.