Close

The Hon’ble Coop minister – 40 gram gold Jewelry loan waiver

Publish Date : 11/02/2022
.

..

செ.வெ.எண்:-20/2022

நாள்:11.02.2022

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள்,கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 50,120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பங்காருபுரத்தில் காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இன்று(11.02.2022) நடைபெற்ற அரசு விழாவில், கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 50,120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணியை, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலையில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கி துவக்கி வைத்தார்கள்.

விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைய பல மக்கள் நலத்திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள். பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதோடு, சொல்லாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க அதனைச் செயல்படுத்திடும் முகமாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 01.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மொத்த நகைக்கடன்களின் எண்ணிக்கை 13,47,033 ஆகும். இதன்மூலம் 10,18,066 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், 50120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 7,420 நபர்களுக்கு ரூ.29.43 கோடி மதிப்பிலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 7,332 நபர்களுக்கு ரூ.28.12 கோடி மதிப்பிலும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 7,113 நபர்களுக்கு ரூ.27.69 கோடி மதிப்பிலும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 7,028 நபர்களுக்கு 26.38 கோடி மதிப்பிலும், பழனி சட்டமன்ற தொகுதியில் 7,201 நபர்களுக்கு ரூ.22.01 கோடி மதிப்பிலும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 6,920 நபர்களுக்கு ரூ.20.71 கோடி மதிப்பிலும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 7,106 பயனாளிகளுக்கு ரூ.26.66 கோடி மதிப்பிலும் என மொத்தம் 50,120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மே 2021-இல் முதல் தவணைத் தொகை ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.129.48 கோடி மதிப்பில் 6,47,430 குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுப் பயனடைந்தார்கள். மேலும், ஜீன் 2021-இல் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,47,598 குடும்ப அட்டைதாரர்கள் இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 வீதம் ரூ.129.51 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினைப் 6,25,934 குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுப் பயனடைந்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலேயே குடிமைப்பொருட்கள் பெற ஏதுவாக 7 முழு நேர நியாயவிலைக் கடைகளும் 22 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்படஅனுமதிவழங்கப்பட்டுள்ளது. மேலும், 35 நியாய விலைக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6,65,820 குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்களுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மேலும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், மத்திய கால கடன், பொது நகைக்கடன், பண்ணைசாரா கடன், வீட்டுக்கடன், வீட்டு அடமானக் கடன், சுய உதவிக்குழுக்கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறு வணிகக்கடன், சிறுபான்மையினருக்கு டாம்கோ கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு டாப்செட்கோ கடன், தானிய ஈட்டுக்கடன், கைம்பெண்களுக்கான கடன், கால்நடை பராமரிப்புக்கடன் உட்பட பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கறவை மாடு பராமரிக்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாளது வரை 45,800 விவசாயிகளுக்கு ரூ.495 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், புதிதாக சேர்க்கப்பட்ட 11,800 உறுப்பினர்களுக்கு ரூ.115.00 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை விவசாய கடன்களுக்கு மட்டுமே வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆடு வளர்த்தல், மாடு வளர்த்தல், பன்றி வளர்த்தல் போன்ற கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பிற்கும் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் இல்லாதவர்களும் கால்நடை பராமரிப்பிற்காக அதிகபட்சமாக ரூ.2 இலட்சம் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நாளது வரை 600 நபர்களுக்கு ரூ.3.20 கோடி அளவிற்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

இலாபத்தில் இயங்கும் 500 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்ற சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 20 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.2.51 கோடி மதிப்பில் பல்நோக்கு சேவை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1989 ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கினார்கள் பெண்களும் அடித்தட்டிலிருந்து பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகவும் டாக்டர் கலைஞர் அவர்களால் சிந்தித்து உருவாக்கப்பட்டதுதான் இந்தத் திட்டம். அந்த அளவில் இது சிறப்பானதொரு திட்டமாக இன்று இந்திய அளவில் எல்லோரும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி, நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 431 குழுக்களில் உள்ள 5,191 உறுப்பினர்களுக்கு ரூ.1,981.35 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 5 சதவீதம் வட்டியில் ரூ.25,000 வரை 120 நாட்களில் திருப்பி செலுத்தும் வகையில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 120 நாட்களுக்கு மொத்த வட்டி ரூ.411 மட்டுமே வசூலிக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 7,40,173 கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களும் பயன்பெறுவர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 104 கைம்பெண்களுக்கு ரூ.26 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்த்தில் 7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 28 இலட்சம் மதிப்பீட்டில் வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் நிறுவப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக செயல்படும் 8 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 20 சதவீதம் தள்ளுபடியுடன் குறைந்த விலையில், சிறந்த மற்றும் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி மற்றும் வத்தலக்குண்டு ஆகிய இரண்டு பகுதிகளில் 2 புதிய மருந்தகங்கள் துவங்கி செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.85 கோடி உத்தேச திட்ட மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவுத் துறையின் சார்பில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அந்தபகுதியில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின், மத்திய கூட்டுறவு வங்கி மெயின் கிளை, வேடசந்தூர், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை, பழனி, சண்முகாபுரம் ஆகிய பகுதிகளில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மேலும், நடமாடும் ஏடிஎம் வாகனம் ஒனறும் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திண்டுக்கல் தலைமையகத்திலும், கன்னிவாடியிலும் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு ஏடிஎம் மையங்கள் நிறுவப்படும்.

திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக சுய சேவை பிரிவுடன் கூடிய அலுவலக கட்டிடம் 9720 சதுர அடியில் ரூ.175 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 6,970 நியாய விலைக் கடைகள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் வாடகையாக ரூ.18.62 கோடி செலவினம் ஏற்படுகிறது. எனவே படிப்படியாக ஆண்டு ஒன்றுக்கு 500 கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 40 புதிய நியாய விலைக்டைகளுக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது குடும்ப தேவைகளுக்காக கூட்டுறவு நிறுவனங்களில் நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்றுக்கொள்ள வழிவகைகள் உள்ளது. அதன்படி நமது மாவட்டத்தில் 70,720 நபர்களுக்கு ரூ.366.53 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நில மேம்பாடு செய்வதற்கு, டிராக்டர் வாங்குவதற்கு, தோட்டத்தில் பைப்லைன் அமைப்புதற்கு மத்திய கால முதலீட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 500 நபர்களுக்கு ரூ.5.17 கோடி மத்திய கால முதலீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், 580 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.1.85 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், 345 நபர்களுக்கு ரூ.274.38 இலட்சம் டாம்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், 104 நபர்களுக்கு ரூ.107 இலட்சம் டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடைபாதை வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்போர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், 3,840 நபர்களுக்கு ரூ.1,257.60 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விலையேறும்போது விற்பனை செய்ய ஏதுவாக தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், 223 நபர்களுக்கு ரூ.6.61 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக 35 நபர்களுக்கு ரூ.2.85 கோடி, வீட்டு அடமானத்தின்பேரில் 83 நபர்களுக்கு ரூ.4.01 கோடி, பண்ணைசாரா கடனாக 573 நபர்களுக்கு ரூ.5.57 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றைடையச் செய்வதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியோடு உள்ளார்கள். இது மக்களாட்சி அரசு, குளறுபடி இல்லாத அரசு, மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்ப்பதில் கழக அரசு உறுதியோடு உள்ளது. இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

விழாவில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர்(பொறுப்பு) திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் திரு.எஸ்.முத்துக்குமார், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.