Close

The Hon’ble Coop minister – Christian women welfare

Publish Date : 24/12/2021
.

செ.வெ.எண்:-60/2021

நாள்:24.12.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறிஸ்துவ மகளிருக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை 120 பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு, உதவித்தொகைக்கான காசோலைகளை 120 பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(24.12.2021) வழங்கி தெரிவித்ததாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்டு கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்கள், தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு, கிறிஸ்துவ பெண்கள் சிறிய தொழில்கள் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களில் தகுதியான 120 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.19.54 இலட்சம் மதிப்பில் உதவித்தொகை இன்று வழங்கப்படுகிறது. இட்லிக்கடை, பழக்கடை, தையல் தொழில், காய்கறிக்கடை, மளிகைக்கடை, மீன் கடை, பூக்கடை, துணிக்கடை, கால்நடை வளர்ப்பு, டீக்கடை, பெட்டிக்கடை, சிற்றுண்டிக்கடை, பால் கடை போன்ற சிறு தொழில்கள் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இதுபோன்ற உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவ பெண்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில்களை மேம்படுத்த தொழில் கடன்களும் வழங்கப்படும். தொழில் கடன் தேவைப்படுவோர் முறையாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் தங்க நகைக்கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்வதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நகைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும்.

கொடைக்கானல் பகுதியில் சிறுமி இறந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலைப்பகுதியில் உள்ள யானைகள் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்கள் மற்றும் விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்கும் வகையில், தற்காலிகமாக காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் யானைகள் வரும் வழித்தடங்களில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, யானைகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வனத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கட்டுமானப் பணிக்கு மணல் தேவைப்படுவோர் ஆன்லைனில் பதிவு செய்து மணல் வாங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் கட்டுமான பணிக்கு மணல் கிடைப்பதில் சிரமம் இருக்காது. இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சு.சண்முகம், கண்காணப்பாளர் திரு.ரெ.சுரேஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் திரு.ஆல்பர்ட் பெர்னான்டோ, டிஎம்எஸ்எஸ்எஸ் செயலாளர் திரு.சாம்சன் ஆரோக்கியதாஸ், பான் சேக்கர்ஸ் மகளிர் கல்லூரி துணை முதல்வர் திரு.அமலி, திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் திரு.ஆரோக்கிய பிரபு உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.