Close

The Hon’ble Coop minister -Development works

Publish Date : 31/12/2021
.

.

செ.வெ.எண்:-75/2021

நாள்:30.12.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் 50,168 நபர்களுக்கு சுமார் ரூ.188.11 கோடி மதிப்பில் தங்க நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது-

பள்ளி கட்டடங்கள், புதிய நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து, 318 பயனாளிகளுக்கு ரூ.1.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அய்யம்பாளையம் தேசிய ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் புதிய நியாயவிலைக்கடை ஆகியவற்றை திறந்து வைத்து, முதியோர், விதவை மற்றும் மாற்றத்திறனாளிகள் என 28 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பில் உதவித்தொகை, 80 பயனாளிகளுக்கு ரூ.42 இலட்சம் மதிப்பில் உட்பிரிவு பட்டா, 5 பயனாளிகளுக்கு ரூ.2.95 இலட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, 20 பயனாளிகளுக்கு ரூ.14.72 இலட்சம் மதிப்பில் பயிர்க்கடன், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 கடனுதவி, 30 பயனாளிகளுக்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்புக் கடன், 25 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், 16 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை என மொத்தம் 205 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், அய்யம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 89 பயனாளிகளுக்கு ரூ.52 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை இன்று(30.12.2021) வழங்கினார்கள்.

விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பான மக்களாட்சியை செயல்படுத்தி வருகிறார்கள். கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில், கூட்டுறவு வங்கிகளில் மொத்தமுள்ள 48,84,726 நகைக் கடன்களில் 7,65,738 நகைக்கடன்கள் 40 கிராமிற்கும் மேலானவை ஆகும். மீதமுள்ள 41,18,988 நகைக் கடன்களில் 21,63,441 நகைக்கடன்கள் அனைத்தும் ஒரே குடும்ப அட்டையில் இடம் பெற்றவர்கள் சேர்ந்து 40 கிராமிற்கும் மேலாக வைத்த பல நகைக் கடன்களாகும். எஞ்சியுள்ள 19,55,547 நகைக் கடன்கயில் ஏஏஒய் குடும்ப அட்டையை மற்றவர்கள் பயன்படுத்தி முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,20,748 ஆகும். மீதமிருக்கும் 17,34,799 நகைக்கடன்களில் ஏற்கேனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற 2,13,887 நகைக்கடன்கள் நீங்களாக மீதமுள்ள 15,20,912 நகைக்கடன்களில் பிற விதிமீறல்களை நீக்கிய பிறகு(போலி நகை, நகைகளே இல்லாத காலி பொட்டலங்கள் முதலான விதி மீறல்கள்) 13,47,033 நகைக்கடன்கள் தற்போது தள்ளுபடிக்கு தகுதியானவையாக கண்டறியப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 50,168 நபர்களுக்கு சுமார் ரூ.188.11 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

எனவே, உண்மையான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பலன் அடைந்ததை, இந்த அரசு 100 சதவீதம் தீவிரமான ஆய்வுக்குப் பின்னர் உறுதி செய்துள்ளது. எந்தவொரு பொறுப்பான அரசாங்கமும் இந்த நடவடிக்கையைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பமாகும்.

ஆத்தூர் தொகுதி மக்களுக்கு கடந்த கழக ஆட்சியின்போது வழங்கப்பட்ட உதவித்தொகைகள் பல ஆயிரம் பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது, தகுதியுள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் மகளில் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன் தொகை ரூ.2,761 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் 5 பவுனுக்கு குறைவாக தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதன் வாயிலாக ரூ.6,000 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத்துறையில் சுயஉதவிக்குழு கடனுக்கு 12 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன்தொகை ரூ.3 இலட்சத்திற்குட்பட்டது எனில் 7 சதவீதம் வட்டி வசூலிக்கும் வகையில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், தொழிற்கடன் என பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கறவைமாடு பராமரிக்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. நெல்லூரில் பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி அனைவரையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், போடிக்காமன்வாடி ஊராட்சியில் ரூ.8.60 இலட்சம் மதிப்பீட்டில் போடிக்காமன்வாடி பிரிவில் பயணிகள் நிழற்குடை, ரூ.15.47 இலட்சம் மதிப்பீட்டில் போடிக்காமன்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம், சித்தரேவு ஊராட்சி, ஒட்டுப்பட்டியில் பயணிகள் நிழற்குடை, சிங்காரக்கோட்டை மற்றும் நெல்லூரில் புதிய நியாயவிலைக்கடை, சிங்காரக்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் விரிவாக்க அலுவலக கட்டடம் ஆகியற்றை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் 4 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் கடனுதவி, 3 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.3.81 இலட்சம் மதிப்பில் கடனுதவி, 17 விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி எம்.மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் திருமதி எம்.ஹேமலதா மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி பி.பாப்பாத்தி, போடிகாமன்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி எஸ்.நாகலட்சுமி சசிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.