Close

The Hon’ble Coop minister – Gramasaba meeting

Publish Date : 25/04/2022
.

செ.வெ.எண்:-66/2022

நாள்:24.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

குட்டத்துப்பட்டி ஊராட்சி, மைலாப்பூரில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அனைத்து குறைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், குட்டத்துப்பட்டி ஊராட்சி, மைலாப்பூரில் இன்று(24.04.2022) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் கலந்துகொண்டார்.இக்கூட்டத்தில் அனைவரும் கிராமசபைக் கூட்டம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

இந்தப்பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் பல்வேறு குறைவாடுகள் இருந்தன. இதற்கு தீர்வு காண கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. காவிரி ஆற்றில் புதியதாக 2 சம்புகள் அமைத்து கூடுதல் குடிநீர் வழங்க ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வைக்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு தற்போது வரும் காவிரி தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் பற்றாக்குறையின்றி வழங்க நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதியோர் உதவித்தொகை கடந்த ஆட்சி காலத்தில் 650 நபர்களுக்கு நிறுத்தப்பட்டது. தற்போது தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிறுத்தப்பட்டவர்களில் 70 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்றும் 300 நபர்களுக்கு வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நான் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளை மாற்றி 30,000 லிட்டர், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமப்புற மக்களை மேம்பாடு அடையும் வகையில் வேலைவாய்ப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவுத்துறையில் பெண்களுக்கு அதிகளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.சிவகுருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேதா, திரு.அண்ணாமலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி ஆரோக்கிய சுதாசெல்வி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திரு.சத்தியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் திருமதி சுமதி, கன்னிவாடி பேரூராட்சித்தலைவர் திரு.சண்முகம், குட்டத்துப்பட்டி ஊராட்சித்தலைவர் திரு.வேல்கனி, துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.