Close

The Hon’ble Coop minister inspection-college site-Authoor

Publish Date : 23/12/2021
.

.

செ.வெ.எண்:-58/2021

நாள்:23.12.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் சீவல்சரகு ஊராட்சிப் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட சுதநாயகிபுரத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7.73 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. கல்லூரி அமைக்கப்படவுள்ள இடத்தினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரும், கூடுதல் பதிவாளருமான திரு.கோ.க.மாதவன் அவர்கள் முன்னிலையில், இன்று(23.12.2021) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்;டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்கள். அரசு சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்களின் செயல்பாடு, முன்னேற்றம், என்னென்ன பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பதை தனியாக டேஸ் போர்டு அமைத்து கண்காணித்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் பொற்கால ஆட்சியை செயல்படுத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லூரிகள் தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். அதன்படி, ஆத்தூரில், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும். இந்த கல்லூரி தற்காலிகமாக ஜெயினி ஹெல்த் அண்ட் எஜுகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் சார்ந்த கல்லூரி வளாகத்தில் உள்ள உபரி கட்டடங்களில் செயல்படும்.
கல்லூரியில் முதலாம் ஆண்டில் பி.ஏ.(கூட்டுறவு), பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ.(பொருளியல்) மற்றும் பி.ஏ.(அரசியல் அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் கல்லூரி இயங்கும்போது, கூட்டுறவு பயிற்சி உட்பட அனைத்துப் பாடப்பிரிவுகளும் தொடங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்களில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் கொண்டுவரப்பட்டன. அவர் வழியில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 4 கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்துள்ளார்கள். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரியும், உயர்கல்வித்துறை சார்பில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரியும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சித்தா கல்லூரி தொடங்கவும், கொடைக்கானலில் கூட்டுறவுத்துறை தொடர்பான பயிற்சி கல்லூரி அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்படவுள்ள ஜெயினி ஹெல்த் அண்ட் எஜுகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் சார்ந்த கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டடங்களை பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் திரு.சு.முத்துக்குமார், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குநர் திரு.ம.செல்வகுமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் திரு.கி.அன்பரசன், திரு.ராஜாங்கம், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் திரு.சி.சக்கரவர்த்தி மணிமாறன், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் திரு.இரா.கணேசன், கூட்டுறவு மேலாண்மை நிலையம் முதல்வர் திரு.சு.கிருஷ்ணகுமார், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி, துணைத்தலைவர் திருமதி ஹேமலதா மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.