Close

The Hon’ble Coop minister -Kannivadi-Sembatti Co op function

Publish Date : 25/01/2022
.

.

செ.வெ.எண்:-42/2022

நாள்:25.01.2022

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், 736 பயனாளிகளுக்கு ரூ.4.18 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை மூலம் கால்நடை வளர்ப்பிற்கு வட்டியில்லா நடைமுறை மூலதனக்கடன் உதவிகளை வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சி சமுதாயக்கூடம் மற்றும் செம்பட்டி சிஎம் மஹால் ஆகிய இடங்களில் இன்று(25.01.2022) நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் 736 பயனாளிகளுக்கு ரூ.4.18 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை மூலம் கால்நடை வளர்ப்புக்கான வட்டியில்லா நடைமுறை மூலதனக்கடன் உதவிகளை வழங்கினார்கள்.

விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் மகளிர் சுயஉதவிக்குழு திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஏராளமான மகளில் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், மத்திய அரசின் நிபந்தனைகளை தளர்த்தி, 60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பான மக்களாட்சியை செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று, மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளினால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக உழைத்து மக்கள் முதல்வராக திகழ்கிறார்கள்.

தமிழக மக்களுக்காக, கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 10 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட 55,000 சுய உதவிக்குழுக்களின் ரூ.2,761 கோடி மதிப்பிலான கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை மூலம் 5 பவுனுக்கு குறைவாக தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதன் வாயிலாக ரூ.6,000 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 50,168 நபர்களுக்கு சுமார் ரூ.188.11 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. அவர்களின் நகைகள் விரைவில் திருப்பி வழங்கப்படவுள்ளது.

கூட்டுறவுத்துறையில் சுயஉதவிக்குழு கடனுக்கு 12 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன்தொகை ரூ.3 இலட்சத்திற்குட்பட்டது எனில் 7 சதவீதம் வட்டி வசூலிக்கும் வகையில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், தொழிற்கடன் என பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கறவை மாடு பராமரிக்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

கால்நடை வளர்ப்போருக்கு தங்களது தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் வட்டியில்லா நடைமுறை மூலதன கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தற்போது வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ரூ.1.60 இலட்சம் வரை தனி நபர் ஜாமீன் அடிப்படையில் பிணையமின்றி கடன் வழங்குவதுபோல் கால்நடை வளர்ப்பிற்கும் கடன் வழங்கப்படும்.

வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ரூ.3 இலட்சத்திற்கு உட்பட்டு இக்கடன் வழங்கப்படும். பயிர்க்கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதனகடன் இரண்டும் சேர்த்து ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் கடன் வழங்கப்படும்.

வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் ஏதும் பெறாமல் கால் நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை மூலதனக்கடன் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உரிய காலத்திற்குள் நடைமுறை மூலதன் கடனை திருப்பி செலுத்தினால் 7 சதவீதம் வட்டி ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். சொந்த நிதியை பயன்படுத்தும் கூட்டுறவுச் சங்கம், வங்கிகளுக்கு 2 சதவீதம் வட்டி மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளது வரை 497 நபர்களுக்கு ரூ.3 கோடி அளவிற்கு வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய விழாவில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் மற்றும் கன்னிவாடி சரகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 358 பயனாளிகளுக்கு, ரூ.2.15 கோடி மதிப்பிலும், செம்பட்டி பகுதியில் சித்தையன்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் கன்னிவாடி சரகத்திற்குட்பட்ட 378 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பிலும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இன்றையதினம் மட்டும் 736 நபர்களுக்கு ரூ.4.18 கோடி மதிப்பில் வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக மே 2021ல் 6,47,430 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.120.48 கோடி மற்றும் ஜுன் 2021ல் 6,47,598 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள் என ரூ.129.51 கோடி, பொங்கல் பரிசுத்தொகுப்பு 6,65,820 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 முழு நேர நியாயவிலைக்கடைகள், 22 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில், அனைத்து மக்களுக்கும் தரமான மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. கூட்டுறவு மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. நகரங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மருந்தகங்கள் தற்போது கிராமப்பகுதிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டு மட்டும் 75 மருந்தகங்கள் தொடங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் உயிர் காக்கும் மருந்துகள் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கூட்டுறவு கடன் சங்கங்களும் விரைவில் ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்படவுள்ளது.

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றைடையச் செய்வதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியோடு உள்ளார்கள். இது மக்களாட்சி அரசு, குளறுபடி இல்லாத அரசு, மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்ப்பதில் கழக அரசு உறுதியோடு உள்ளது. இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக கன்னிவாடியில் 9 மற்றும் 10வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாயவிலைக்கடையை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், கூட்டுறவுத் துணைப்பதிவாளர் திரு.முத்துக்குமார், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி எம்.மகேஸ்வரி முருகேசன், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி பரமேஸ்வரி முருகன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.