Close

The Hon’ble Coop minister -Kannivadi TP

Publish Date : 03/01/2022
.

..

செ.வெ.எண்:-01/2022

நாள்:02.01.2022

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ன் கீழ் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சியில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இன்று(02.01.2022) அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்து, தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பான மக்களாட்சியை செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று, மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளினால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக உழைத்து மக்கள் முதல்வராக திகழ்கிறார்கள்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ன் கீழ், கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சியில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பேருந்து நிலையம் அமைப்பதற்காக கடந்த கழக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது, திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன், கன்னிவாடியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மகளிர் சுயஉதவிக்குழு திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஏராளமான மகளில் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், மத்திய அரசின் நிபந்தனைகளை தளர்த்தி, 60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான். மேலும், அவருடைய தலைமையிலான ஆட்சி காலத்தில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. உயர் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.

மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி காலத்தில்தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் தற்போது பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக மக்களுக்காக, கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 10 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட 55,000 சுய உதவிக்குழுக்களின் ரூ.2,761 கோடி மதிப்பிலான கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை மூலம் 5 பவுனுக்கு குறைவாக தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதன் வாயிலாக ரூ.6,000 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 50,168 நபர்களுக்கு சுமார் ரூ.188.11 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

கூட்டுறவுத்துறையில் சுயஉதவிக்குழு கடனுக்கு 12 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன்தொகை ரூ.3 இலட்சத்திற்குட்பட்டது எனில் 7 சதவீதம் வட்டி வசூலிக்கும் வகையில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், தொழிற்கடன் என பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கறவை மாடு பராமரிக்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், கன்னிவாடி பேரூராட்சி, கே.மணியக்காரன்பட்டி தெற்குத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலையரங்கத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், உதவி செயற்பொறியாளர்(பேரூராட்சிகள்) திரு.ஆ.இசக்கி, கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி க.யுவராணி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.