Close

The Hon’ble Coop minister-Konur

Publish Date : 18/04/2022
.

செ.வெ.எண்:-42/2022

நாள்:16.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

கோனூரில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், தர்மத்துப்பட்டி அருகிலுள்ள கோனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இன்று(16.04.2022) மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க நிதியுதவி வழங்கும் வழங்கும் விழா நடைபெற்றது. மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1.36 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.4.50 லட்சம் நிதியுதவிகளை வழங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் தலைமை வகித்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,120 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் புதிதாக சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பயிர்க்கடன் வழங்கப்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது.இன்றைய விழாவில், கோனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 15 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.36 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் மாங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அதிகபட்சம் ரூ.15 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.ஆத்தூர் தொகுதியில் வக்கம்பட்டியில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கன்னிவாடியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் அமைக்கப்படுகிறது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன், திண்டுக்கல் சரக துணைப் பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஆனந்தி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ம.செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, அண்ணாதுரை, கூட்டுறவு வளர்ச்சி அலுவலர்கள் சக்கரவர்த்தி மணிமாறன், கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.