Close

The Hon’ble Coop minister-rainfall damage inspection – Reddiyarchatram

Publish Date : 19/11/2021
.

..

செ.வெ.எண்:-48/2021

நாள்:18.11.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்த பல்வேறு குடியிருப்பு பகுதிகளை இன்று(18.11.2021) நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், அரண்மனைப்புதூர் பகுதியில் ரயில்வே சப்வே பகுதியில் மழைநீர் வடிந்து செல்லாமல் தேங்கியிருப்பதை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள். இதனைத்தொடர்ந்து, புதுசத்திரம் ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி காலனியில் திருமதி வேலம்மாள் என்பவர் வீடு மழையினால் சேதமடைந்ததையடுத்து. அந்த வீட்டை பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து, பழக்கனூத்து ஊராட்சி, நாலுபுள்ளிக்கோட்டை கிராமத்தில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருப்பதை பார்வையிட்டார்கள். பின்னர் சட்டடையப்பனூர் பகுதியிலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டார்கள்.

கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டப் பின்னர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

அரண்மனைபுதூர் பகுதியில் ரயில்வே சப்வே அடியில் தண்ணீர் தேங்குகிறது. அந்தப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தேவையான பணிகள் மேற்கொண்டு முழுமையாக தீர்வு காணப்படும். மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

புதுசத்திரம் ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி காலனியில் கன மழைக்கு ஒரு வீடு சேதமடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இந்தப் பகுதியில் 50க்கும் அதிகமான தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அனைத்து வீடுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதுகுறி;த்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து, பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல்(மேற்கு) வட்டாட்சியர் திரு.ரமேஷ்பாபு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு.சிவகுருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஜி.வேதா, திரு.கே.அண்ணாத்துரை, உதவிப்பொறியாளர் திரு.தேக்ராஜ் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.