Close

The Hon’ble co-minister-rainfall damage inspection

Publish Date : 18/11/2021
.

.

செ.வெ.எண்:-46/2021

நாள்:18.11.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்த ஆத்துப்பட்டி பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் குடகனாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தண்ணீர் சூழ்ந்த கரையோர கிராமங்களை இன்று(18.11.2021) நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பட்டி கிராமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் மழைநீர் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையறிந்த மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் அங்கு சென்று, மழைநீர் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குடகனாறு, சந்தானவர்த்தினி ஆறு மற்றும் வரட்டாறு ஆகிய 3 ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட ஆத்துப்பட்டி கிராமத்தை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. ஆத்துப்பட்டி மற்றும் விட்டல்நாயக்கன்பட்டி இடையே சிறியதாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் மூழ்கி, குழாய்கள் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆத்துப்பட்டி கிராமத்தைச் சுற்றி 3 பக்கமும் ஆறுகள் உள்ளதாலும், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் கிராமத்தைச் சுற்றி மழைநீர் சூழ்ந்து விடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தப்பகுதியில் மழைநீர் தேங்கிவிடுவதால் பொதுமக்கள் 2 மாதங்கள் வரை கிராமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

கடந்த கழக ஆட்சி காலத்தில் ஆத்துப்பட்டியிலிருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அய்யம்பாளையத்தில் இதே நிலை இருந்தது. அப்போது, ரூ.8 கோடி மதிப்பீட்டில் அங்கு பாலம் அமைக்கப்பட்டது. அதேபோல், ஆத்துப்பட்டி பகுதியில் பாலம் அவசியம் தேவை. ஆத்துப்பட்டி பகுதியில் 300க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு பாலம் அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.காசிசெல்வி, திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.சி.வெங்கடரமணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(பழனி) திரு.கு.கோபி, உதவிப்பொறியாளர் திரு.தமிழ்செல்ன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், திண்டுக்கல்(மேற்கு) வட்டாட்சியர் திரு.ரமேஷ்பாபு, வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.கே.போஸ் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.