The Hon’ble Coop minister – Varumun Kappom

செ.வெ.எண்:-50/2022
நாள்:26.03.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளியில்‘வருமுன் காப்போம் திட்டம்’ மருத்துவ முகாமை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளியில் ‘வருமுன் காப்போம் திட்டம்’ மருத்துவ முகாம் துவக்க நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.03.2022) நடைபெற்றது. ‘வருமுன் காப்போம் திட்டம்’ மருத்துவ முகாமை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் துவக்கி வைத்தார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு வருமுன் காப்போம் திட்டத்தை துவக்கினார்;. இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகள், 4 நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் இலட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். வருமுன் காப்போம் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, பலருக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் மதுரை அப்பலோ, மீனாட்சி மிஷன், சென்னை அப்பலோ மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இன்றும் நலமுடன் உள்ளனர்.
வருமுன் காப்போம் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தினை மீண்டும் துவக்கி வைத்துள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் ‘வருமுன் காப்போம் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இத்திட்டத்தின் மூலம் 3,000-க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து செயல்பட வேண்டும்.
வீட்டிற்கு அடித்தளம் எப்படி அவசியமோ, அதேபோல் பொதுமக்கள் உடல்; பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ள வேண்டும். நோய்கள் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் அவற்றை விரைந்து குணப்படுத்திவிட முடியும். புற்று நோய், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் போன்றவற்றை பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருத்துவ சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்திவிட முடியும்.
அரசின் உன்னத திட்டமான வருமுன் காப்போம் திட்டம், அனைத்துப்பகுதி ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் திரு.எஸ்.ராஜப்பா, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு.மு.வரதராஜன், மாநகர்;நல அலுவலர் மரு.இந்திரா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.