Close

The Hon’ble Cooperative Minister – Bicycle – Authoor

Publish Date : 22/09/2022
.

செ.வெ.எண்:-66/2022

நாள்:21.09.2022

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் 752 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி, காந்திகிராமம், செட்டியபட்டி, அம்பாத்துரை, என்.பஞ்சம்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.09.2022) நடைபெற்றது.

விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இன்று பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் 329 மாணவ, மாணவிகளுக்கும், காந்திகிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கும், செட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவ, மாணவிகளுக்கும், அம்பாத்துரை முருகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கும், என்.பஞ்சம்பட்டி செயின்ட் அகஸ்தியர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 101 மாணவிகளுக்கும், என்.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 54 மாணவ, மாணவிகளுக்கும், பிள்ளையார்நத்தம் டாக்டர் ஜாகிர் உசேன்(சிறுபான்மையினர் அரசு நிதி) மேல்நிலைப் பள்ளியில் 53 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 752 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்தார்கள். அதன்பின்னர் அது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள வழிவகை செய்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள்.

அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவம் படிப்பில் சேருவதற்காக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டில் ஆண்டுதோறும் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளது. அரசு பள்ளிகளில் படித்து உயர் பதவிகளை அதிக நபர்கள் பெற்றுள்ளனர். நீங்களும் சிறப்பாக கல்வி பயின்று உயர் பதவிகளை அடைய வேண்டும். பள்ளிகளில் படிக்கும்போது ஒழுக்கத்துடன் படித்து உயர் பதவிகள் அடைய வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பேராசியர் அன்பழகன் நினைவாக 18,000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதில், அதிகளவிலான வகுப்பறை கட்டடங்கள் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு கொண்டுவரப்படும். ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வசதிக்காக பேருந்து வசதிகள் தேவைப்படும் பகுதிகளில் பேருந்துகள் இயக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உட்பட பலர் குழு அமைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி பிரதிபாகணேசன், சின்னாளப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் திருமதி ஆனந்தி பாரதி ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பத்மாவதி ராஜகணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.கதிரேசன், ஆத்துார் வட்டாட்சியர்(பொ) திருமதி நிர்மலா கிரேசி, முக்கிய பிரமுகர் திரு.முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஏழுமலையான், திரு.தட்சிணாமூர்த்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ. மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.