Close

The Hon’ble DCM-VC -Rural Development – Food and Civil Supply Ministers -Sports

Publish Date : 04/02/2025
.

செ.வெ.எண்:-70/2025

நாள்:-31.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு பொன்விழாவை சிறப்பித்திடும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(31.01.2025) தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் காணொலிக்காட்சி வாயிலாக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் காணொலிகாட்சி வாயிலாக தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 436 கிராம பஞ்சாயத்துகளுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ்கிட்ஸை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்குவோம் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தோம்.

அதன்படி, மதுரையில் சென்ற வருடம் பிப்ரவரி மாதம், முதன்முதலாக 420 ஊராட்சிகளுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ்கிட் வழங்குகின்ற திட்டத்தை தொடங்கிவைத்தோம். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும்நேரில்சென்று கலைஞர்ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கினோம்.

இன்றைக்கு இறுதியாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள மொத்தம் 436 கிராம ஊராட்சிகளுக்கு 720 கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்க இருக்கின்றோம். தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்ளுக்கு நாங்கள் அனைவரும் நேரில் சென்று ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கினோம். அதே போல உங்களுடைய மாவட்டங்களுக்கும் வரணும்னு எங்களுக்கு ஆசைதான். ஆனால் தவிர்க்க முடியாத பணிச்சூழல் காரணமாக எங்களால் நேரில் வந்து, இந்த விளையாட்டு உபகரணங்களை கொடுக்க முடியவில்லை. ஆனாலும், உங்களையெல்லாம் காணொலிகாட்சி வழியிலயாவது பார்த்துவிட வேண்டுமென்று உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றேன்.

நம்முடைய திராவிட மாடல் அரசு சொல்வதை செய்கின்ற அரசு. இதற்கு உதாரணமாக, ஒரே வருடத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 பஞ்சாயத்துகளுக்கும் 16 ஆயிரத்து 800 எண்ணிக்கையிலான கலைஞர்ஸ்போர்ட்ஸ் கிட்ஸை கொடுத்திருக்கின்றோம் என்பதை உங்களிடம் தெரிவிப்பதை நான் பெருமையாக கருதுகின்றேன்.

கலைஞர்ஸ் போர்ட்ஸ் கிட் கொடுக்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும், அதன் மேடையும் எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியான, நெருக்கமான நிகழ்ச்சியாக அமைந்தன. குறிப்பாக அந்த மேடைகளே ரொம்ப வித்தியாசமானதாக அமைந்தன.

இன்றைக்கு இந்த மேடையில் கூட, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த Fencing வீராங்கனை நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவி தங்கை தமிழ்ச்செல்வி வந்திருக்கின்றார். இவர் National Games, Senior National Games ஆகியவற்றில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று, Junior & Cadet Asian Championship பட்டதையும் பெற்றுள்ளார்.

அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கூட்டுறவுத்துறையில்மூத்த ஆய்வாளர் பணியை நம்முடைய திராவிடமாடல் அரசு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள். தங்கை தமிழ்ச்செல்வி விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் முன் மாதிரியாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

அதே மாதிரி, தேனி மாவட்டத்தை சேர்ந்த Basket Ball வீரர் தம்பி சுஜித் அவர்களும் இங்கே வருகை தந்திருக்கிறார்.தம்பி சுஜித் SGFI National Games, Youth National Games போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுசாதனைபடைத்துள்ளார். அவர், நம்முடைய SDATSports Hostel மாணவர் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமையாகும்.

தம்பி சுஜித் அவர்களும், தங்கை தமிழ்ச்செல்வி அவர்களும் விளையாட்டுத்துறையில் இன்னும் பல சாதனைகளை படைக்க என்னுடைய வாழ்த்துக்களை, பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்களைப்போல இன்னும் பல நூறு வீரர்களை உருவாக்க வேண்டும்என்றுநம்முடைய அரசு உறுதியோட செயல்பட்டுகொண்டுள்ளது.

“விளையாட்டுப்போட்டிகளில் சாதனைப் படைக்கும் வீரர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன என்ற செய்தியே வரக்கூடாது” என்கின்ற வகையில் செயல்பட வேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையா இருக்கக் கூடாது என்றுதான் Tamil Nadu Champions Foundation என்ற திட்டத்தை மட்டுமல்ல, அதுபோன்ற பல திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்திவருகின்றது.

அதே போல, தேசிய அளவிலான போட்டிகளில் 614 வீரர்களுக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் சுமார் 12 கோடி அளவில் நிதி உதவி வழங்கியிருக்கின்றோம். அவர்களில் 113 பேர் பதக்கங்களை வென்று நம்முடைய மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில்இருந்து நிதி உதவி தேவைப்படுவோர்https://tnchampions.sdat.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு நான்கேட்டுக் கொள்கின்றேன்.

சமீபத்தில், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறைநிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வாய்ப்பினை வழங்கும் விதமாக,நம்முடையமுதலமைச்சர் அவர்கள், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நேரத்தில் 84 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

இந்த முன்னெடுப்புகளில் முக்கியமான ஒன்று தான், நம்முடைய கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்குற திட்டம். விளையாட்டு என்பது நகரங்கள் மட்டுமல்ல, குக்கிராமத்துல உள்ள பிள்ளைகளுக்கும் போய் சேரணும்னுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார்கள்.

கலைஞர் அவர்களின் பெயர்ல எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும், நம்முடையவிளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் அவர்களுடைய பெயரில் செயல்படுத்தப்படுகின்ற திட்டம் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டம் ஆகும்.

ஏன் இந்த திட்டத்துக்கு கலைஞர் பெயரை வைத்தோம் என்று கேட்கின்றார்கள். அதுக்கு ஒரு காரணம் இருக்கின்றது. கலைஞர்அவர்களிடம் இருந்த உழைப்பு, பயிற்சி, விடாமுயற்சி, போராடும் குணம், Team Spirit இவை அனைத்தும் விளையாட்டில் வெற்றி பெற வேண்டிய ஒவ்வொரு வீரருக்கும் தேவையானவையாகும். அதை உணர்த்ததான்கலைஞர்அவர்களுடையபெயரை இந்ததிட்டத்திற்குவைத்துள்ளோம்.

ஆகவே, இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நீங்கள் வெற்றிகரமான வீரர், வீராங்கனையராக வரவேண்டும். இன்றைக்கு ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வாங்குகின்ற நீங்கள் நாளைக்கு பதக்கங்களை வெல்லவேண்டும். அதற்கு நம்முடைய திராவிடமாடல் அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும்.

விளையாட்டு உபகரணங்களைப் பெற்று இருக்கின்ற திண்டுக்கல் – தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றங்களுக்கும், அதன் முகங்களாக வருகை தந்திருக்கும் இளைஞர்கள் – மாணவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள், நன்றி வணக்கம் என்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், விளையாட்டு துறையிலும் சரி, செயலாக்கத்துறையிலும் சரி அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி சாதனைப்படுத்தி வருகிறார்.

ஒலிம்பிக்போட்டியை நடத்துவது என்பது ஒரு மிகப்பெரியசாதனை. அந்த வகையில் செஸ் ஒலிம்பிக் போட்டியை தமிழ்நாட்டில் நடத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். தொடர்ந்து கேலோ இந்தியா போட்டி நடத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. செஸ் போட்டியில் பல்வேறு சாதனையாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சிறந்த விளையாட்டு விரர்கள் 82 பேருக்கு அரசு பணி ஆணை வழங்கப்பட்டது சிறப்பான சாதனை. விளையாட்டுத்துறையில் வீரர்களை உருவாக்கி, பயிற்சி அளித்து, அவர்களை உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் சிறப்பான சேவை புரிந்து வருகிறார்கள். இது விளையாட்டு வீரர்களுக்கான பொற்காலம் ஆகும்.

இன்று நடைபெற்றி நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 509 தொகுப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் காரணமாக, இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத்துறையில் முத்திரைப் பதித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பது, விளையாட்டு வீரர்கள் உருவாக சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.v

தமிழ்நாட்டில் 22 சிறு விளையாட்டு மைதானங்கள் அமைக்க அறிவிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆத்துார் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி ஆகியற்றிற்கு தலா ஒரு சிறு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளித்த மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விளையாட்டு வீரர்களை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோரின் கரங்களை வலுப்படுத்துவோம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச வாள்வீச்சு வீராங்கனை செல்வி எம்.தமிழ்ச்செல்வி அவர்கள், தேசிய கூடைப்பந்து வீராங்கனை செல்வி எஸ்.வித்யபாரதி அவர்கள் விளையாட்டு துறையில் தங்கள் அனுவங்கள் குறித்து பேசினர். மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய கூடைப்பந்து வீரர் திரு.யு.எஸ்.சுஜித் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக விளையாட்டு துறையில் தனது அனுவங்கள் குறித்து பேசினார்.

பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. இரா.சிவா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.