Close

The Hon’ble DCM VC – Women SHG day

Publish Date : 12/06/2025
..

செ.வெ.எண்:-28/2025

நாள்:-11.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,069 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.91.89 கோடி வங்கிக் கடனுதவிகளை, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(11.06.2025) நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மணிமேகலை விருது மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக்குழு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்களை மகளிரிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் உறுதியாக உள்ளார்.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து அவர்களின் ஆற்றலை மேப்படுத்துவதோடு வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக் கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 10,249 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 4,322 குழுக்களும் என ஆக மொத்தம் 14,571 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

வங்கி கடன் இணைப்பாக கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 18,876 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.992.20 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ஆம் நிதியாண்டில் 14,779 மகளிர் சுய உதவிக்குழவினருக்கு ரூ.828.60 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 14,021 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ921.00 மதிப்பீட்டிலும், 2024-25-ஆம் நிதியாண்டில் 13,060 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1008.86 கோடி மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம், திண்டுக்கல் மாவட்டத்தில் 1069 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மொத்தம் ரூ.91.89 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. ரெட்டியார்சத்திரம் வட்டார மகளிர் சுயஉதவிக்குழு சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டு இன்று விருது பெற்றுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 6,800 வீடுகள், நடப்பு ஆண்டு சுமார் 4000 வீடுகள், ஊரக குடியிருப்புகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் சுமார் 8,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

பெண்களின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சியை காட்டுகிறது. அது இந்த சமூகத்தின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகும். அதனால்தான், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் பெண்களை முன்னிலைப்படுத்தியே செயல்படுத்தப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக செயல்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

விழாவில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மகளிர் சுயஉதவிக்குழு எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அதை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.

பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் முக்கியமானவர்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் கூறினார். அதை நிறைவேற்றும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை சட்டத்தை நிறைவேற்றினார்.

பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்களை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கினார். இதன்காரணமாக, பெண்கள் சமூகத்தில், பொருளாதாரத்தில், கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.

அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்ற பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சுமார் 1.38 இலட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு சுமார் ரூ.36,000 கோடி கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்களின் கையிருப்பு என்பது அந்த குடும்பத்தின் பாதுகாப்பு ஆகும்.

அந்த வகையில், இன்றையதினம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மணிமேகலை விருது, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அதில், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டார மகளிர் குழுவுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும், வடமதுரை மற்றும் வத்தலகுண்டு பகுதி மகளிர் குழுவினர் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளனர், என பழனி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.