Close

The Hon’ble Food and Civil Supplies Minister Function – Ration Shop

Publish Date : 21/01/2023
.

செ.வெ.எண்:-44/2023

நாள்:19.01.2023

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், சங்கம்பாளையம், இலட்சலப்பட்டி, தாளையூத்து ஆகிய பகுதிகளில் நியாயவிலைக்கடை புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும், கொத்தையம் ஊராட்சி தீர்தாக்கவுண்டன்வலசு ஆதிதிராவிடர் காலனியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் நியாயவிலைக்கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா பல்வேறு பகுதிகளில் இன்று(19.01.2023) நடைபெற்றது.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பங்கேற்று இராஜாம்பட்டி ஊராட்சி சங்கம்பாளையத்திலும், தாளையூத்து ஊராட்சி வடக்கு இலட்சலப்பட்டி மற்றும் தாளையூத்து ஆகிய பகுதியில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் கட்டும் பணிகளுக்கும், தீர்தாக்கவுண்டன் வலசு பகுதியில் புதிய சமுதாய கூடம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குடும்ப அட்டைதாரர்கள் குடிமை பொருட்களை பெறுவதற்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக, நியாயவிலைக்கடைகளை பிரித்து புதிய நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 174 நியாயவிலைக்கடைகளை பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 45 நியாயவிலைக்கடைகளை பிரித்து, தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடைகளுக்கு புதியதாக சொந்த கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, இராஜாம்பட்டி ஊராட்சி சங்கம்பாளையத்தில் ரூ.9.13 இலட்சம் மதிப்பீட்டிலும், தாளையூத்து ஊராட்சி வடக்கு இலட்சலப்பட்டியில் ரூ.9.13 இலட்சம் மதிப்பீட்டிலும், தாளையூத்து ஊராட்சி தாளையூத்தில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டிலும் நியாயவிலைக்கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுள்ளது.

மேலும், தீர்தாக்கவுண்டன் வலசு ஆதிதிராவிடர் காலனி பகுதியில் புதியதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. மேலும், இப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் காவேரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வர ரூ.1000 கோடியில் பெரிய திட்டம் ஒன்றிற்கு அனுமதி அளித்துள்ளார்கள். இத்திட்டம் வரும் ஜனவரி 31-ந் தேதி ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு, விரைவில் பணிகள் முடிக்கப்படவுள்ளது.

மேலும், கலைஞர் வீடு வசதி வழங்கும் திட்டத்தின்கீழ் ஏழை, எளிய குடிசை வீடுகள், ஓட்டுவீடுகள், தகர வீடுகள் அனைத்தும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் அனைவருக்கும் காண்கிரீட் விடுகள் கட்டித்தர மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான திட்டம் ஒன்றை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும், 1 முதல் 5 –ஆம் வகுப்பு வரை பரிசாத்த முறையில் ஒருசில பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 –ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம் தொடங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள். மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு இதுவரை அதிகபட்சம் ரூ.14 இலட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டது. தற்போது ரூ.20 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவைகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் பல கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராம பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு தார்சாலைகளாக போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தை திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. மேலும், பொங்கல் தொகுப்புகள் மிகவும் தரமானதாக வழங்கப்பட்டது. பெண்கள் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பு எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அவைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசிற்கு அனைவரும் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சரவணன், பழனி வட்டாட்சியர் திரு.சசி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிமுத்து, திருமதி தஷீரா, முக்கிய பிரமுகர்கள் திரு.ஷரிஷரசுதன், திரு.சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.