Close

The Hon’ble Food and Civil Supplies Minister Programme

Publish Date : 01/08/2022
.

செ.வெ.எண்:-91/2022

நாள்:30.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம்; மற்றும் சண்முகநதியின் குறுக்கே மானூர் செங்கத்துரையில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய கட்டடம் கட்டுதல் மற்றும் சண்முகாநதி ஆற்றின் குறுக்கே மானூர் செங்கத்துரையில் புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையின் இன்று(30.07.2022) நடைபெற்றது.

தொப்பம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கும், மானூர் செங்கத்துரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சண்முகநதி ஆற்றின் குறுக்கே ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பதற்கும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்புதான், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதுவரை 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்கள். தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார்.

மகளிருக்கு அரசு நகரப்பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டதையடுத்து, ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆட்சிப்பொறுப்பேற்ற 14 மாதங்களில் தமிழகத்தில் இதுவரை 12.50 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயக்கடன், சிறுவணிக கடன், மாற்றுத்திறனாளி கடன் என பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடு இல்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார். 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பெற்றவுடன் சுயஉதவிக்குழுக்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்தார்கள். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வைத்துள்ளவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்காக 4 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை சார்பில் 2 கல்லூரிகள், கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லூரி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒரு மகளிர் கல்லூரி மற்றும் பழனியில் ஒரு சித்தா கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டியில் உயர்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ள அரசு கல்லூரிக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். அதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். அதில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமையவுள்ளது. இங்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசு கல்லூரிகளில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நத்தம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அரசு கல்லூரி இல்லை. அங்கு அடுத்த ஆண்டு அரசு கல்லூரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றையதினம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 11 அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் வந்துவிட்டது. சாணார்பட்டி, வத்தலகுண்டு, குஜிலியம்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல், சண்முகநதியின் குறுக்கே மானூர் செங்கத்துரையில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், விருப்பாச்சியில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே ரூ.2.50 கோடி மதிப்பீட்டில உயர்மட்ட பாலம், பருத்தியூர் வேலுரில் பாலம், பொருளூரில் பாலம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்காம்பட்டியில் மேம்பாலம், சோழிப்பெரும்புதூரில் பாலம் என பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள் வசதிக்காக தேவைப்படும் இடங்களில் பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களுக்குப் பதில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். அந்த திட்டத்தின்படி திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராடசியில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கீரனூர் பேரூராட்சியில் சுமார் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, ரூ.50 கோடி மதிப்பீட்டில் 500 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 500 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீரனாரில் மேலும் 300 வீடுகள் கட்டப்படவுள்ளன.

மரிச்சிலம்பு ஊராட்சியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 கி.வா. திறன் கொண்ட புதிய துணை மின்நிலையம், தும்மலப்பட்டியில் 130 கி.வா. திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. தேவைப்படும் இடங்களில துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிகளவில் நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சுமார் 200 புதிய பகுதிநேர, முழுநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் குடிமைப் பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில 12 இடங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலை திருப்பதி கோயில் போன்ற அமைப்பிற்கு உருவாக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள சமார் 153 கோயில்களை புனரமைக்க தலா ரூ.8 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைப் பிரித்து புதிதாக கள்ளிமந்தையம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கவும், ஒட்டன்சத்திரம் வட்டத்தை பிரித்து புதிதாக கள்ளிமந்தையம் வட்டம் உருவாக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயப்பணிகளை மேம்படுத்துவதற்காக ஆட்சிப்பொறுப்பேற்ற 14 மாதங்களில் 1.50 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்படும். குளஙகள், கண்மாய்கள் சீரமைக்கப்படும். சண்முகநதி, நல்லதங்காள் ஆறு, நங்காஞ்சியாறு ஆகிய இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நெல்லுக்கான ஆதார விலையையும் உயர்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் நெல் கொள்முதல் பணியை செப்.1ம் தேதி முதல் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த ஓராண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது.

இந்திய அளவில் வனப்பகுதி 33 சதவீதம். தமிழகத்தில் வனப்பகுதி 23 சதவீதமாக உள்ளது. அதனால் தமிழகத்தில் வனப்பகுதியை அதிகரித்து, பசுமை மாநிலமாக மாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். “மரங்களை வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொன்மொழிக்கேற்ப தமிழகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. ஆரோக்கியமான காற்று கிடைக்கிறது. இதன்மூலம் மக்களின் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். இது வருங்கால சந்ததியினருக்கா நாம் வழங்கும் சொத்து.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம், கல்வி பேருந்து போன்ற வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதையடுத்து, பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதையடுத்து பழனி மருத்துவமனையில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 9 மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந் முதலமைச்சராக திகழ்கிறார். இருந்தபோதிலும், தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் வருவதே சிறப்பு என்று கூறி தமிழத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

உலக அளவில் 187 நாடுகள் பங்கேற்கும் 44-வது ஒலிம்பியாட்டிக் செஸ் போட்டியை நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று தமிழகத்தில் சிறந்த முறையில் நடத்தி வருகிறார். தமிழகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் 234 தொகுதியிலும் கபாடி போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற இன்னும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

மானூர் செங்கந்துரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 நபர்களுக்கு ரூ.2.80 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு மூலதனக்கடன், 31 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிமுத்து, திருமதி தாகிரா, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி மு.அய்யம்மாள், முக்கிய பிரமுகர்கள் திரு.ராஜாமணி, திரு.சுப்பிரமணியன், திரு.ரங்கராஜ், திருமதி ஈஸ்வரிராமராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.கிருஷ்ணன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் திருமதி சத்யா, கீரனூர் பேரூராட்சி தலைவர் திரு.கருப்புசாமி, பழனி வட்டாட்சியர் திரு.சசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.