Close

The Hon’ble Food and Civil Supplies Minister- Review Meeting

Publish Date : 13/06/2022
.

செ.வெ.எண்:-30/2022

நாள்:-11.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் இன்று(11.06.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் துறைவாரியாக அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஒவ்வொரு துறை வாரியாக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொணடு, இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில், தகுதியுடையவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் 12.12 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒராண்டில் 107 நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்காக 5 கல்லூரிகள், ஒரு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கல்லூரியாக தொடங்கப்பட்டு வருகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி என்ற வகையில் நத்தம் தொகுதிக்கும் ஒரு அரசுக்கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்கல்வித்துறை சார்பில் கள்ளிமந்தையத்தில் இந்த ஆண்டு கல்லூரி தொடங்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் விரைவில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.121 கோடி மதிப்பீட்டில் சமார் 3,200 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நபார்டு திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் விருப்பாட்சி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மானூர் கிராமத்தில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலம் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் (டிஎன்ஆர்டிபி) மூலம் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் ரூ.5000 மாத தொகுப்பூதியம் அடிப்படையில் 35 நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தின் வனப்பரப்பு 33 சதவீதம் மேம்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கூறியுள்ளதன்படி, மரம் வளர்ப்பதன் மூலம் நமது வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான சுற்றுப்புறச்சூழலை நாம் வழங்க முடியும். மரக்கன்றுகள் நடவு செய்து தமிழகத்தை பசுமை மாநிலமாக உருவாக்க உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளிடமிருந்து மொத்தம் 477 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் நடவடிக்கையில் உள்ளன. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அரசு அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆர்வமுடன் செயல்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சத்திரப்பட்டி கிராமம் தீண்டாமை இல்லாத ஜாதி, மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அதற்கான பரிசுத்தொகை ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வே.லதா, மாவட்ட வன அலுவலர்; திரு.செ.பிரபு, இ.வ.ப., நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் திரு.சரவணன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.ரவிபாரதி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.சி.ரெங்கராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சி.புஷ்பகலா, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி மு.அய்யம்மாள், துணைத்தலைவர் திருமதி த.காயத்ரிதேவி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி ரா.சத்தியபுவனா, துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், பழனி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி ஈஸ்வரிகருப்புசாமி, துணைத்தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன், கீரனூர் பேரூராட்சி தலைவர் திரு.கே.கருப்புசாமி, துணைத்தலைவர் திரு.அப்துல்சுக்கர், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி பா.தேவிகா, பழனி நகராட்சி ஆணையாளர் திருமதி ஆர்.கமலா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி, பழனி வட்டாட்சியர் திரு.ப.சசி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.பெருமாள்சாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.