The Hon’ble Food and Civil Supply Minister – CM Relief fund

செ.வெ.எண்:-24/2023
நாள்:-08.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்தூர் வட்டம், கொம்பேறிபட்டி ஊராட்சி, மம்மானி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகள் சுகுமார், அழகுமீனா ஆகியோர்களின் பெற்றோரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5.00 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொம்பேறி பட்டி ஊராட்சி, மம்மானி கிராமத்தில் கடந்த 05.11.2023 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகள் சுகுமார், அழகுமீனா ஆகியோர்களின் பெற்றோரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5.00 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (08.11.2023) வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொம்பேறிபட்டி ஊராட்சி, மம்மானி கிராமத்தில் திரு.சுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த 05.11.2023 அன்று அவருடைய மகன் சிறுவன் சுகுமார்(வயது 6) வீட்டில் தகர கதவை திறக்க முயன்றபோது, மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. அதைப்பார்த்த சிறுவனின் சகோதரி அழகுமீனா(வயது 16) உடனடியாக அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றார். அப்போது, சிறுமி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆழ்ந்த இரங்கலையும், குழந்தைகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார். மேலும், அந்த குடும்பத்தினரின் எதிர்கால நலன் கருதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5.00 இலட்சம் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன் மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலை இன்று(08.11.2023) வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட திமுக சார்பில் ரூ.1.00 இலட்சம் மற்றும் வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள் சார்பில் ரூ.25,000 ஆகிய தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது.
மேலும், மிகவும் ஏழ்மையான அந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்பான வீடு வழங்கும் வகையில், உடனடியாக 3 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அங்கு அரசின் திட்டங்களின் கீழ், விலையில்லா வீடு கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை ஒட்டன்சத்திரத்தில் உள்ள குருகுலத்தில் சேர்ந்து தொடர்ந்து படிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரை நன்கு படிக்க வைத்து, போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தி வேலைவாய்ப்பை பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இரண்டு குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.