Close

The Hon’ble Food and Civil Supply Minister – Emp Private Job fair – Vedasandur

Publish Date : 06/11/2023
.

செ.வெ.எண்:-13/2023

நாள்:-04.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அரசு துறைகளில் 67,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என வேடசந்துாரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.11.2023) நடைபெற்ற மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பணிவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் நலத்திட்ட உதவி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.

மகளிர் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிருக்கு நகர பேருந்தில் கட்டணமில்லா பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.06 கோடி குடும்பத்தலைவிகள் பயனடைந்துள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம், வீட்டு வரி ரசீது ஆகியவைகளுடன் பதிவு செய்தால், அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியிருந்தால் அவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 31,000 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 17.50 இலட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோல் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48“ திட்டத்தில் யாராவது விபத்தில் சிக்கி காயமடைந்தால் அவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் 600 மருத்துவமனைகள் தெரிவு செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்ற 10,225 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கினார். மேலும், அரசு துறைகளில் 67,000 காலிப்பணியிடங்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார்கள்.

தமிழக அரசு சார்பில் இளைஞர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்வேறு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் சுயதொழில் தொடங்கிடவும், தொழில் திறன் பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்புகள் பெறவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தொழில் பயிற்சி அளித்து, அவர்கள் தொழில் தொடங்கிட வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகள் படிக்கின்ற காலத்திலேயே தொழிற்பயிற்சி அளிக்கும் “நான்முதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 10 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைகின்ற நோக்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்கள் தங்கள் கவனத்தை சிதறவிடாமல், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, பணி வாய்ப்புகளை பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்,

வேலைவாய்ப்புத் துறையால் தனியார்துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், தனியார் துறையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முன்னணி நிறுவனங்களை பங்கேற்க செய்து, மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள் மற்றும் விருப்பாட்சியிர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பழனியில் சித்தா மருத்துவக்கல்லுாரி, கொடைக்கானலில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி இணையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

மேலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் ரூ.11.00 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது விரைவில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1,66,000 படித்த இளைஞர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 100 இடங்களில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 59 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில், 1,62,992 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர். இதில் 7,315 தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு 22,230 பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆத்துார் பகுதிகளில் ஏற்கனவே தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்றைய தினம் வேடசந்துாரில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, பொறியியல் படித்த இளைஞர்கள் கல்வித் தகுதிக்கேற்ப பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சௌடீஸ்வரி கோவிந்தன், வேடசந்துார் பேரூராட்சி தலைவர் திருமதி கா.மேகலா கார்த்திகேயன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி சு.காமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி தமிழ்செல்வி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.