The Hon’ble Food and Civil Supply Minister inspection – Vedasandur TNCSC

செ.வெ.எண்:-25/2023
நாள்:-08.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (08.11.2023) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தீபாவளி, கிறிஸ்துமஸ், தைப்பொங்கல் திருநாள் காலங்களில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்கள் தட்டுப்பாடு இன்றி, தரமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் பொருட்கள் இருப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் 100 சதவீதம் பொருட்கள் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று(08.11.2023) வேடசந்துார் குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 வட்டங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள் உள்ளன. குஜிலியம்பாறை மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டங்களில் மட்டும் குடோன்கள் இல்லாமல் இருந்தது. அங்கும் குடோன்கள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 300 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களை சீரமைக்க ரூ.90.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். அதன்படி, குடோன்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேடசந்துார் குடோனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நெல் கொள்முதல் செய்து, மழையில் நனையாமல் பாதுகாப்பதற்காக குடோன்கள் அமைக்க ரூ.238 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். அதன்படி, 2.86 இலட்சம் மெ.டன் நெல் சேமிக்கு அளவிற்கு குடோன்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1.20 இலட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் அளவிற்கு குடோன்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் சமார் 4.00 இலட்சம் மெ.டன் நெல் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 36,000 நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, அனைத்து நியாயவிலைக்கடைகள் மூலம் தரமான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் அரவை செய்வதற்காக 700 அரவை ஆலைகள் தேர்வு செய்யப்பட்டு, கருப்பு, பழுப்பு நிற அரிசி இல்லாத வகையில் கலர்சாப்டர் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் மூலம் தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத பணிகள் முடிக்கவும், இன்னும் 9 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.