Close

The Hon’ble Food and Civil Supply Minister – Kalanjipatty centre

Publish Date : 09/06/2025
.

செ.வெ.எண்:-12/2025

நாள்:-05.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் பெண்களை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன.

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

மேலும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில், ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்துாரில் கூட்டறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பழனியில் சித்தா கல்லுாரி, குஜிலியம்பாறையில் தொழிற்பயிற்சி நிலையம், கொடைக்கானலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கெள்ள வேண்டும். மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த சென்னை அண்ணா போட்டித்தேர்வு பயிற்சி மையத்தின் கிளையானது தற்போது காளாஞ்சிப்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 350 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அனைவருக்கும், தமிழ்நாடு அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான அவ்வை பதிப்பக புத்தகம், அவ்பை பதிப்பக ஆங்கில வழி புத்தகம் மற்றும் டிஷா பதிப்ப எஸ்எஸ்சி கையேடுகள் என ரூ.1000 மதிப்புள்ள 200 புத்தகங்கள் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு ஏற்கனவே ஏராளமான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கூடுதல் புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கிட கருத்துரு, பயிற்சித்துறை தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாணவ, மாணவிகளின் குறிக்கோள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை, குறிக்கோள், விடா முயற்சி, கடின உழைப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.

கல்வி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் படித்து போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, உயர் பதவிகளை அடைந்து தங்களை மேம்படுத்திக்கொள்வதுடன், பெற்றோருக்கும், பள்ளிக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதேபோல், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் போட்டித்தேர்வுக்கான ஏராளமான புத்தகங்கள் உள்ளன. மாணவ, மாணவிகளுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையம் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் திட்டமிட்டு படிக்க வேண்டும். அதன்பிறகு குழு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதன் மூலம் வெற்றி அடையலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மைய பொறுப்பாளர்கள் திரு.கோ.சுப்பிரமணியன், திரு.முரளிதரன் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.