Close

The Hon’ble Food and Civil Supply Minister – Kappiliapatti Meeting

Publish Date : 05/05/2023
.

செ.வெ.எண்:-36/2023

நாள்:-24.04.2023

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி – காப்பிலியபட்டி புதிய உரக்கிடங்கை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி-காப்பிலியபட்டி புதிய உரக்கிடங்கு திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காப்பிலியபட்டியில் இன்று(24.04.2023) நடைபெற்றது.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு, ரூ.7 கோடி மதிப்பீட்டில் சுமார் 19 ஏக்கர பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய உரக்கிடங்கை திறந்து வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குப்பைகளை ஆங்காங்கே தீ வைத்து எரிக்கும் பழக்கமும், நீர் நிலைகளில் குப்பைகளை போடும் பழக்கமும் இருந்து வந்தது. தற்போது ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கென காப்பிலியபட்டி பகுதியில் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் கூடம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டுவரப்படும் அனைத்து குப்பைகளும் தரம் பிரிக்கப்பட்டு, உரமாகவும், வேஸ்டேஜ்கள் தொழிற்சாலைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 52 கிராம ஊராட்சிகளில் பெறப்படும் குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து தரம் பிரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கீரனூர் பேரூராட்சி மற்றும் தொப்பம்பட்டி பேரூராட்சியின் ஒரு சில பகுதிகளை இணைத்து தனியாக ஒரு குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்கள் ஊர் சூப்பர்” எனும் திட்டத்தினை துவக்கி உள்ளார்கள். ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிராமங்களில் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். உரக்கிடங்கு பகுதிக்கு வரும் சாலையை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு கொண்டுவரும் குப்பைகளை வாகனங்களில் மூடி வைத்துக் கொண்டு வர வேண்டும்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 30 கோடி அளவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது ரூ. 70 கோடி அளவிலான பணிகள் துவங்கப்பட உள்ளன. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளுக்கு காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வர ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன் பணிகள் இன்னும் ஒரு வார காலத்தில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு மட்டும் ரூ.113 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சுமார் பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பல்வேறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படவுள்ளன. மேலும் 92 கிலோ மீட்டர் தூரமுள்ள பழைய குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் போடப்பட உள்ளது. மேலும் 8617 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இடையகோட்டை பகுதியில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது இப்பகுதியில் தினசரி அதிக அளவிலான மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு 35 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 35 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிராம ஊராட்சியில் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மரக்கன்று வளர்ப்பு திட்டத்தினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை, புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆறு வழிச்சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற பகுதிகளுக்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கி உள்ளார்கள். தார் சாலைகள் அமைக்கப்பட்ட உடன் அங்கும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நமது கிராமப்புற பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு மக்களின் மனதில் இடம்பெற வேண்டும்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். மேலும் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமராவதி – காவிரி ஆறு கூடும் இடத்தில் இருந்து மோட்டார் மூலம் பம்பு செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் ஆய்வுப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 200 நியாய விலை கடைகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 46,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 7000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது புதிய குடும்ப அட்டைகள் பெறவும், தொலைந்து போனால் புதிய குடும்ப அட்டைகள் பெறவும் ஆன்லைன் மூலம் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வராமல் இ-சேவை மையங்கள் மூலம் ரூ.45 செலுத்தி புதிய குடும்ப அட்டையை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டைகள் தபால் அலுவலகம் மூலம் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து சேரும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழகத்தை முன்னிலைப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பேசினார்.

இவ்விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திரு.க.திருமலைசாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திரு.பா.சக்திவேல், ஒட்டன்சத்திரம் நகராட்சி மேலாளர் திருமதி உமாகாந்தி, ஒட்டன்சத்திரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.ராஜாமணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், வாடிப்பட்டி ஊராட்சித்தலைவர் திரு.ஜோதீஸ்வரன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி சத்தியபுவனா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி, ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.