Close

The Hon’ble Food and Civil Supply Minister – (Oddanchdram Samuthaya Valaikappu )

Publish Date : 01/04/2023
.

செ.வெ.எண்:-36/2023

நாள்:-19.03.2023

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் திருமண நிதி உதவி உடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ஒட்டன்சத்திரம் சாணார்பட்டி நத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 98 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் திருமண உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.03.2023) நடைபெற்றது

இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு 200 தாய்மார்களுக்கு வளைகாப்பு பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் 98 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தலா எட்டு கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக முழுவதும் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் துறையின் சார்பில், சமுதாய வளைகாப்பு நடத்திட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் நேற்றைய தினம் தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இன்று ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். மிகவும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மிக ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மருத்துவர் அணுகி மருத்துவ பரிசோதனைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் குழந்தைகளின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். உள்ளாட்சியில் 50 சதவீத பெண்களுக்கான ஒதுக்கீட்டினை கொண்டு வந்துள்ளார்கள். மேலும் உயர் கல்வி பயில அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறார்கள். மேலும் சுய உதவி குழுவினருக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்கள். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் அறிவிக்க உள்ளார்கள். நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் சென்று வருவதால் அவர்களின் செலவுகள் மிச்சப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்

இவ்விழாவில் பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் திருமதி அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் திரு.வெள்ளைச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் திரு.பொன்ராஜ், முக்கிய பிரமுகர்கள் திரு.ஜோதீஸ்வரன், திரு.தங்கராஜ், திரு.தர்மராஜ், ஒட்டன்சத்திரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் திரு.ராஜாமணி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.புஷ்பகலா, குழந்தைகள் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.பூங்கொடி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மரு.அனிதா ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி மற்றும் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.