Close

The Hon’ble Food and Civil Supply Minister -Palani Kovil function – winch

Publish Date : 27/01/2024
.

செ.வெ.எண்:-55/2024

நாள்:24.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது மின் இழுவை ரயில் சேவையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது மின் இழுவை ரயில் சேவையினை, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(24.01.2024) துவக்கி வைத்தார்.

இந்த விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மூன்று மின் இழுவை இரயில்கள் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன. முதலாவது மின் இழுவை இரயில் 1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் ஒரு முறை 40 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 3,200 பக்தர்கள் பயணம் செய்யலாம். இரண்டாவது மின் இழுவை இரயில் 1982-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதில் ஒரு முறை 32 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,560 பக்தர்கள் பயணம் செய்யலாம். மூன்றாவது மின் இழுவை இரயில் 1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் ஒரு முறை 36 பக்தர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,880 பக்தர்கள் பயணம் செய்யலாம்.

மூன்றாவது மின் இழுவை இயிலில் அதிக பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் மின் இழுவை இரயில் பெட்டிகள் ரூ.95.00 இலட்சம் மதிப்பீட்டில் தொலைக்காட்சி, மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டிஒரே நேரத்தில் 72 பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் 27.04.2023 முதல் மேற்கொள்ளப்பட்டு சென்னை. உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டு, தகுதிச் சான்று பெறப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இன்று(24.01.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 பக்தர்கள் வரை பயணம் செய்ய இயலும்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்கும் விடுதிகள் நவீனமயத்துடன் கட்டப்படவுள்ளன. திருப்பதிக்கு இணையாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த விழாவில், அறங்காவலர் குழு தலைவர் திரு.க.சந்திரமோகன், அறங்காவலர்கள் திரு.கே.எம்.சுப்பிரமணியன், திரு.ச.மணிமாறன், திரு.ரா.ராஜசேகரன், திருமதி கே.சத்யா, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், பழனி நகர்மன்ற தலைவர் திருமதி உமாமகேஸ்வரி, பழனி நகர் மன்ற துணைத்தலைவர் திரு.கந்தசாமி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் திருக்கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.