Close

The Hon’ble Food and Civil Supply Minister – Palani Meeting

Publish Date : 06/02/2024
.

செ.வெ.எண்:-11/2024

நாள்:04.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.81.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மனநல காப்பகம், ரூ.25.59 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதலுதவி மையம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 200 கிராம் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.81.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மனநல காப்பகம், மலைக்கோயிலுக்கு செல்லும் யானை பாதையில் இடும்பன் கோயில் அருகில் ரூ.25.59 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதலுதவி மையம் ஆகியவற்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 200 கிராம் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சிப்பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 1339 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழனி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக திருக்கோயில் மூலம் ஏற்கனவே 500 கிராம் பெட்ஜார் மற்றும் டின் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வருடத்தில் 500 கிராம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் 1.5 கோடி விற்பனை செய்யப்பட்டு சுமார் ரூ.55.00 கோடி பெறப்படுகிறது. பக்தர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றபடி சிறிய அளவிலான பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனைக்கு இருந்தால் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது ஏற்கனவே உள்ள இயந்திரத்தில் உபயதாரர் மூலம் ரூ.10.00 லட்சம் செலவில் இயந்திர பாகங்கள் மாற்றம் செய்யப்பட்டு 200 கிராம் பஞ்சாமிர்தம் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பஞ்சாமிர்தம் உற்பத்தி செய்யப்படுகிறது. 200 கிராம் பஞ்சாமிர்தம் விற்பனை இன்று(04.02.2024) துவக்கி வைக்கப்பட்டுள்ளது,

அதேபோல், மாலைக்கோயிலுக்கு யானை பாதை வழியாக செல்லும் பக்தர்கள், முதியோர்கள், குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள இடும்பன் கோயில் அருகில் தற்காலிகமாக முதலுதவி சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தற்காலிக முதலுதவி சிகிச்சை மையத்தை அகற்றிவிட்டு ரூ.25.59 இலட்சம் மதிப்பீட்டில் நிரந்தர கட்டடம் கூடுதல் மருத்துவ வசதிகள் மற்றும் உபகரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த முதலுதவி சிகிச்சை மையம் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிதி மூலம் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையுடன் இணைந்து மனநலம் குன்றிய 50 நபர்கள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் பழனியில் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடம் ரூ.81.95 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு கூடுதல் வசதிகளுடன் மனநல மறுவாழ்வு மையமாக கட்டப்பட்டுள்ளது. இம்மையத்தின் பணியாளர்கள் சம்பளம், மருந்துகள், சுகாதார பொருள்கள், தளவாட சாமான்கள், சேவை கட்டணம், உணவு மற்றும் பராமரிப்பு செலவுகள் என ஆண்டுக்கு சுமார் ரூ.72.00 இத்திருக்கோயிலிருந்து செலவிடப்படவுள்ளது. இந்த கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, முதலுதவி சிகிச்சை மையத்திற்கான உபகரணங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இணை ஆணையர் திருமதி லட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.