The Hon’ble Food and Civil Supply Minister – Palani Temple Battery car

செ.வெ.எண்:-49/2025
நாள்:-15.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து, பூஜை விவரங்கள் குறித்த மின்னணு திரையை திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கத்தை இன்று(15.06.2025) தொடங்கி வைத்து, பூஜை விவரங்கள் குறித்த மின்னணு திரையை (LED DISPLAY BOARD) திறந்து வைத்தார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் எளிதாக மின் இழுவை இரயில் நிலையம், படிப்பாதை, கம்பிவட ஊர்தி நிலையம், சுற்றுலா பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு சிரமமின்றி செல்வதற்காக கிரிவீதியில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தலா 11 இருக்கைகள் கொண்ட மின்கல கார்கள் 17 எண்ணிக்கையிலும், தலா 23 இருக்கைகள் கொண்ட மின்கல மினி பேருந்து 10 எண்ணிக்கையிலும், டீசல் மினி பேருந்து 2 எண்ணிக்கையிலும் என ஆகமொத்தம் 29 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கண்ணன் இரும்பு எஃகு நிறுவன(Kannappan iron and steel company pvt Ltd.. (Kiscol)) நிறுவனத்தின் உரிமையாளர் திரு.பி.எஸ்.டி.கண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு மெர்க்கண்டையல் வங்கி(Tamilnadu Mercantile Bank) மதுரை மண்டல துணை பொது மேலாளர் திரு.டி.கண்ணன் ஆகியோர் பக்தர்களின் வசதிக்காக 23 இருக்கைகள் கொண்ட மின்கல சிற்றுந்து தலா ஒன்று வீதம் இரண்டு வாகனங்களை திருக்கோயில் நிர்வாகத்திற்கு உபயமாக வழங்கியுள்ளனர். இந்த வாகனங்கள் இயக்கம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கிரிவீதியில் பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லாமல் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள். இத்திருக்கோயில் தொடர்பான காலபூஜை விவரங்கள், கட்டணமில்லா சேவைகள் மற்றும் கட்டண சேவைகள் குறித்து திருக்கோயிலின் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் படிப்பாதை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு பாதவிநாயகர் திருக்கோயில் அருகில் 20 அடி நீளம், 10 அடி அகலம் என்ற அளவில் புதியதாக மின்னணு திரை(LED DISPLAY BOARD) திருப்பூரை சேர்ந்த M/s.கேட்ஸ் வேர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.க.ஜெயகுமார் மற்றும் குடும்பத்தினரால் உபயமாக வழங்கப்பட்டு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர்/செயல் அலுவலர், துணை ஆணையர், உதவி ஆணையர், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.