Close

The Hon’ble Food and Civil Supply Minister – Samuthaya Valaikappu – Oddanchatram

Publish Date : 07/11/2023
.

செ.வெ.எண்:-15/2023

நாள்:-05.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் அம்மன் திருமண மண்டபத்தில் இன்று(05.11.2023) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக முழுவதும் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடத்திட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், சமுதாய வளைகாப்பு விழா அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வளைகாப்பு நிகழ்ச்சிகள் முந்தைய காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த மகிழ்ச்சி பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய விழாவில், ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த தலா 100 கர்ப்பிணி தாய்மார்கள் வீதம் மொத்தம் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். மிகவும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மிக ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மருத்துவ பரிசோதனைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக 15 வட்டாரங்கள் உள்ளன. இவற்றில் தொப்பம்பட்டி வட்டாரத்தில் உள்ள 121 குழந்தைகள் மையங்களில் 498 கா;ப்பிணிகள், 419 பாலுாட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 5,340 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் உள்ள 120 குழந்தைகள் மையங்களில் 442 கர்ப்பிணிகள், 453 பாலுாட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 5840 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை, ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது ஒரு முக்கியமான நிகழ்வு, தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறப்பாகும்.

நம்முடைய உடலும், மனமும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. மனதில் ஏற்படும் மாற்றங்கள், முக்கியாக கவலைகள் உடலையும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பெரிதும் பாதிக்கின்றது. பாதுகாப்பான தாய்மைக்கு, கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப கால கவனிப்புகள், பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஏனெனில், பாதுகாப்பான தாய்மையை பின்பற்றாததால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுடைய அஜாக்கிரதையினால் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு விகிதமும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. பாதுகாப்பான தாய்மைக்காக கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தாய்மார்கள் பின்பற்றுவதன் மூலம் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும், அவர்களின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய முடியும். அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். உள்ளாட்சியில் 50 சதவீத பெண்களுக்கான ஒதுக்கீட்டினை கொண்டு வந்துள்ளார்கள். மகளிருக்கு நகர பேருந்தில் கட்டணமில்லா பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் சென்று வருவதால் அவர்களின் செலவுகள் மிச்சப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்பட்டு வருகிறது. விதவையர் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் நாலு வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஈவேரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் உள்ளிட்ட நான்கு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.06 கோடி குடும்பத்தலைவிகள் பயனடைந்துள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம், வீட்டு வரி ரசீது ஆகியவைகளுடன் பதிவு செய்தால், அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியிருந்தால் அவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 31,000 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 17.50 இலட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு 2 வண்ணச்சீருடைகள் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் படிக்கின்ற காலத்திலேயே தொழிற்பயிற்சி அளிக்கும் “நான்முதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 10 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள் மற்றும் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பழனியில் சித்தா மருத்துவக்கல்லுாரி, கொடைக்கானலில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி இணையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

மேலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் ரூ.11.00 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது விரைவில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி இரா.சத்தியபுவனா ராஜேந்திரன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.அனிதா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் திருமதி அமுதகலா, திருமதி அபராஜிதா மற்றும் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.