Close

The Hon’ble Food and Civil Supply Minister – Samuthaya valaikkappu

Publish Date : 11/03/2025
.

செ.வெ.எண்:-13/2025

நாள்:-05.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி, தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி, கலைஞரின் கனவு இல்லத் திட்டம் என மொத்தம் 202 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் அம்மன் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.03.2025) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, நத்தம், சாணார்பட்டி ஆகிய வட்டாரங்களில் 101 பயனாளிகளுக்கு ரூ.97.46 இலட்சம் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 101 நபர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான முன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் 22 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் ரூ.13.38 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திருமண நிதியுதவி ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டிலும், தொப்பம்பட்டி வட்டாரத்தில் 20 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் ரூ.12.17 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திருமண நிதியுதவி ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டிலும், நத்தம் வட்டாரத்தில் 42 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் ரூ.25.56 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திருமண நிதியுதவி ரூ.13.75 இலட்சம் மதிப்பீட்டிலும், சாணார்பட்டி வட்டாரத்தில் 17 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் ரூ.10.34 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திருமண நிதியுதவி ரூ.6.25 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ.97.46 இலட்சம் மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம்(தலா 8 கிராம்) மற்றும் திருமண நிதியுதவி வழங்கினார்.

மேலும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கள்ளிமந்தையம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் 101 நபர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.1.01 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கள்ளிமந்தையம் கிளை சார்பில் வழங்குவதற்கான முன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இந்த விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து தெடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனையே மிக முக்கியமான நோக்கமாக கொண்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி வட்டாரத்தின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக 241 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரண்டு வட்டாரங்களில் உள்ள குழந்தைகள் மையங்கள் மூலமாக சுமார் 684 காப்பிணிகள், 733 பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 11,186 குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள்.

மேலும் இவ்வட்டாரத்திலுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தின் மூலமாக இணை உணவு வழங்கபட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பத்தை முதன் முதலில் புதிவு செய்யப்பட வேண்டிய இடம் குழந்தைகள் மையமாகும். இதன் தொடர்ச்சியாக குழந்தைகள் மையங்களில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி அளித்தல், இணை உணவு வழங்குதல், மாதந்தோறும் எடை எடுத்தல், வீடுகள் பார்வையிடுதல் மூலம் ஊட்டச்சத்து கல்வி அளித்தல், பிரசவத்திற்கு தயாராக ஆலோசனை வழங்குதல், சமுதாய சார்ந்த நிகழ்வுகள் மூலம் கர்ப்பிணிகளின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு கர்ப்பிணிகளை கவனிப்பதற்கான ஆலோசனை வழங்குதல் முதலிய பணிகளை குழந்தைகள் மைய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதனிடையே கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தவும், அவர்களின் மனமகிழ்ச்சியை மேம்படுத்தவும் சமுதாய வளைகாப்பு வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் இந்த இரு வட்டாரங்களில் 200 ஏழை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியம் மற்றும் அக்கருவிளை சுமக்கும் தாயின் ஆரோக்கியம் மேம்பட தேவையானவற்றை குறித்த கருத்துகள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், பாதுகாப்பான தாய்மை மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் தாயின் மனநிலை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வப்புதனால் தாய் மன அழுத்தம், வருத்தம் மற்றும் வேதனையுடன் இருப்பது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதனால் மகிழ்ச்சியான சூழ்நிலையில் மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகள் அரசால் நடத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத குழந்தைகளை உருவாக்குவதே ஆகும்.

பெண் கல்வியின் முக்கியத்தை உணர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு , திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பட்டம் படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூ.50,000 நிதி உதவியும், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.25,000 நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய 4 வகையான திருமண நிதி உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2024-2025-ஆம் நிதியாண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு 477 பயனாளிகளுக்கு தங்க நாணயங்கள்(8 கிராம்) தலா ரூ.60,858 மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவி ரூ.1.82 கோடி நிதி உதவியும் என மொத்தம் ரூ.4.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, பழனி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) திரு.இரா.சக்திவேல், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.