The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Oddanchatram-World Womens Day

செ.வெ.எண்:-28/2025
நாள்:-08.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 1926 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.127.11 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிப்பட்டி கலைஞர் நுாற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் இன்று(08.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், 1926 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.127.11 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1989-ஆம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை தொடங்கினார். பெண்கள் சுயமாக சம்பாதித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
தந்தை பெரியார் பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும், அவர்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் எண்ணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத் திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் சென்னையில் இன்று உலக மகளிர் தின விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதோடு வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 10,050 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 3,964 குழுக்களும் ஆக மொத்தம் 14,014 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வங்கி கடன் இணைப்பாக 2021-22-ஆம் நிதியாண்டில் 18,876 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.992.20 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. 2022-23- ஆம் நிதியாண்டில் 14,779 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.828.60 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டிற்கு 14,021 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.921.00 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
2024-25-ஆம் ஆண்டிற்கு ரூ.1,043 கோடி வங்கி கடன் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 12,746 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.973.86 கோடி வங்கி கடனாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்(08.03.2025) திண்டுக்கல் மாவட்டத்தில் 1,851 சுய உதவிக்குழுவிற்கு மொத்தம் ரூ.125.99 கோடி வங்கிக் கடன் உதவி வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் கூட்டுறவுத்துறை சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டது. இந்த கல்லுாரிக்கு ரூ.75.00 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஆண்களும் பெண்களும் படிக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித் துறை சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் அரசு கலை மற்றும் கல்லுாரி கள்ளிமந்தையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் படிக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அம்பிளிக்கையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு சொந்த கட்டடம் ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் குஜிலியம்பாறையில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழனியில் சித்தா கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் அரசு சார்பில் 8 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்காக சென்னை அண்ணா நிறுவனத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றிய அரசு, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற வாய்ப்புகளை படித்த இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் பெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒழுக்கம், கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மாணவ, மாணவிகள் உயர் பதவிகளை அடைந்து பெற்றோருக்கும், பள்ளி, கல்லுாரிக்கும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,851 சுய உதவிக்குழுவிற்கு ரூ.125.99 கோடி வங்கிக் கடனுதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 36 ஊராட்சிகளை சார்ந்த 75 சுய உதவிக்குழுக்களிலுள்ள 141 உறுப்பினர்களுக்கு ரூ.88,25,000 நுண் நிறுவனக் கடனுக்கான ஆணைகள் மற்றும் 7 பயனாளிகளுக்கு ரூ.23,97,878 மதிப்பீட்டில் 30 சதவீதம் இணை மானியத்துடன் கூடிய கடனுக்கான ஆணைகள் என ஆக மொத்தம் 1,926 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.127.11 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள், 7 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.
விழாவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஷ்பாபு, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, ஒட்டன்சத்திரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.ராஜாமணி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஒருங்கிணைப்பாளர் திருமதி சுதாதேவி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.