Close

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Oddanchatram

Publish Date : 11/03/2025
.

செ.வெ.எண்:-12/2025

நாள்:-05.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ரூ.6.19 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(05.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.6.19 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கூத்தம்பூண்டி ஊராட்சி, கழுத்தருக்காபாளையத்தில் கே.டி.பாளையம் மீனாட்சி வலசு சாலை முதல் வெங்கல்பட்டி இணைப்பு சாலை வரை ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டிலும், கே.டி.பாளையம் மார்கண்டாபுரம் சாலை வழி மீனாட்சி வலசு சாலை ரூ.42.66 இலட்சம் மதிப்பீட்டிலும், பாலப்பன்பட்டி ஊராட்சி, பாலப்பன்பட்டிபுதுாரில் பாலப்பன்பட்டி முதல் குப்பாயிவலசு சாலை ரூ.1.43 கோடி மதிப்பீட்டிலும், பாலப்பன்பட்டிபுதூர் முதல் பருத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட வேலூர் எல்லை வரை ரூ.88.17 இலட்சம் மதிப்பீட்டிலும், வேலம்பட்டி ஊராட்சி, வேலுாரில் கீரனூர் வெள்ளைக்கவுண்டன்புதூர் சாலை முதல் வேலூர் சாலை வழி ரூ.44.10 இலட்சம் மதிப்பீட்டிலும், பொருளூர் ஊராட்சியில் தாளையூத்து கள்ளிமந்தையம் சாலை முதல் தீர்த்தாகவுண்டன்வலசு சாலை மற்றும் பூலாம்பட்டி சாலை வழி, மதுரைவீரன் கோயில் சாலை ஆகியவை ரூ.71.00 இலட்சம் மதிப்பீட்டிலும், பொருளூர் குப்பாயிவலசு சாலை ரூ.89.92 இலட்சம் மதிப்பீட்டிலும், சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி, கும்பணதேவன்பட்டியில் ஒத்தையூர் மயான சாலை ரூ. 15.95 இலட்சம் மதிப்பீட்டிலும், கள்ளிமந்தையம் சாலை முதல் ஒத்தையூர் சாலை வரை ரூ.50.74 இலட்சம் மதிப்பீட்டிலும், கள்ளிமந்தையம் ஊராட்சியில் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை முதல் காளியப்பகவுண்டன்பட்டி சாலை வரை ரூ.19.17 இலட்சம் மதிப்பீட்டிலும், தாளையூத்து கள்ளிமந்தையம் சாலை முதல் காளியப்பகவுண்டன்பட்டி இணைப்பு சாலை வரை ரூ.15.98 இலட்சம் மதிப்பீட்டிலும், நீலாக்கவுண்டன்பட்டி முதல் பொட்டிகாம்பட்டி சாலை வழியாக வள்ளியகாவலசு சாலை வரை ரூ.33.70 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.6.19 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், கள்ளிமந்தையம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவப் பணியாளர் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த குழுவினர்களுக்கு 5 பவுனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு வங்கியில் பெண்கள் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் சேமிப்பு ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 6,300 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட 2.5 இலட்சம் பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு வீடுகளை பழுதுபார்க்க ரூ.50,000, கான்கிரீட் வீடுகளை பழுதுபார்க்க ரூ.1.50 இலட்சம் வழக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 18.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 44 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு இதுவரை 1.70 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் முதியோர் உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,200ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது, மேலும், அதிகளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள் மற்றும் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பழனியில் சித்தா மருத்துவக்கல்லுாரி, கொடைக்கானலில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி இணையம், குஜிலியம்பாறையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2 தேர்வில் இதுவரை 12 பேரும், தொகுதி 4 தேர்வில் இதுவரை 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்காக சென்னை அண்ணா நிறுவனத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றிய அரசு, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற வாய்ப்புகளை படித்த இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் பெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒழுக்கம், கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மாணவ, மாணவிகள் உயர் பதவிகளை அடைந்து பெற்றோருக்கும், பள்ளி, கல்லுாரிக்கும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.