Close

The Hon’ble Food and Civil Supply Minister – The Hon’ble Minority Welfare Minister Inspection

Publish Date : 12/02/2024
.

செ.வெ.எண்:-24/2024

நாள்:09.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் இன்று(09.02.2024) பேகம்பூர், மேட்டுப்பட்டி, நத்தம் ரோடு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மற்றும் விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கான வழிவகைகள், வசதிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காகவும், கல்வி மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், அடக்க தலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.10.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். அந்த நிதியிலிருந்து சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக சிறுபான்மையினர் சார்பில் செயல்படும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் ஒரியண்டல் அமிருன்நிஷா உயர்நிலைப்பள்ளி, மேட்டுப்பட்டி புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளி, நத்தம் ரோட்டில் அமைந்துள்ள அரசு பள்ளி சிறுபான்மையினர் நல விடுதி ஆகிய பள்ளி மற்றும் விடுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான குடிநீர் வசதி, வகுப்பறை, கழிவறைகள், பள்ளி உட்கட்டமைப்பு, தேவையான அடிப்படை வசதிகள், மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, உணவு வசதி, படுக்கை அறை, கட்டில், பெட்சீட், கழிவறை வசதி, படிப்பதற்கு காற்றோட்டமான அறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலை, மதியம், இரவு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதுடன், பள்ளிக்கு மதிய உணவு சாப்பிடும் வகையில் மதிய உணவு எடுத்துச் செல்லவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதி கட்டடம், சமையலறை, சுற்றுப்புறச்சூழல், சுகாதார வசதிகள், குளியலறை, கழிவறை வசதிகள், விடுதியில் குப்பை, செடிகள், கொசுவினால் நோய் பரவாமல் இருப்பதற்கு விடுதியினை சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்தும், விடுதியில் மாணவிகளின் வருகை பதிவேடு, பொருள் இருப்பு பதிவேடு, காப்பாளர் வருகை பதிவேடு, சமையல் செய்யும் அறையின் சுத்தம், உணவு தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொல்லபட்டி வக்பு கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் கட்ட ரூ.5.00 இலட்சம், கொசவபட்டி ஜிம்மா பள்ளவாசல் வக்பு கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் கட்ட ரூ.6.75 இலட்சம், ஜவ்வாதுபட்டி புதூர் பள்ளிவாசல் மற்றும் மதரஸா பள்ளிவாசல் மராமத்துப்பணிகள் மேற்கொள்ள ரூ.5.00 இலட்சம், விருப்பாட்சி பள்ளிவாசல் வக்பு பள்ளிவாசல் மராமத்துப் பணிக்கு ரூ.3.00 இலட்சம், மார்க்கம்பட்டி பள்ளிவாசல் வக்பு பள்ளிவாசலில் கழிப்பறைக் கட்ட ரூ.3.00 இலட்சம் வழங்கிடும் பொறுட்டு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிவாசல்களின் தலைவர்கள் அல்லது முத்தவல்லிகள் விரைவில் மானியத்தை பெற்று பள்ளிவாசல் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு.ச.ராசப்பா, மாநகராட்சி உறுப்பினர்கள் திரு.பிலால், ரோஸ்மேரி, வக்பு வாரிய ஆய்வாளர் திரு.பரக்கத்துல்லா, வக்பு வாரியம் திரு.முபாரக், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.