Close

The Hon’ble Food minister – 40 gram gold Jewelry loan waiver

Publish Date : 28/03/2022
.

செ.வெ.எண்:-53/2022

நாள்:27.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

கூட்டுறவு சங்கங்களில் பொது நகைக்கடன் தள்ளுபடி-2021 திட்டத்தில் 4,524 பயனாளிகளுக்கு ரூ.16.42 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொச்சியோடைப்பட்டி, கொசவப்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, கணவாய்பட்டி மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதியில் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(27.03.2022) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட 4,524 பயனாளிகளுக்கு பொது நகைக்கடன் தள்ளுபடி 2021 திட்டத்தின் கீழ், ரூ.16.42 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறார்;. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில், சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்;. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு காலத்தில் நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வசதி என பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். ‘உங்கள் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, அதற்கான தனி அதிகாரியை நியமித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் இதுவரை 11 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவித்ததற்கிணங்க, தமிழகத்தில் சுமார் 12 லட்சம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இதன்மூலம், ரூ.6,000 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ.208 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 54,600 நபர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்றையதினம், ஒட்டன்சத்திரத்தில் ரூ.132.50 இலட்சம் மதிப்பில் 268 பயனாளிகளுக்கும், நொச்சியோடைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80.30 இலட்சம் மதிப்பில் 188 பயனாளிகளுக்கும், ராஜக்காப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.147.68 இலட்சம் மதிப்பில் 414 பயனாளிகளுக்கும், கொசவப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.85.39 இலட்சம் மதிப்பில் 246 பயனாளிகளுக்கும், சாணார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.85.39 இலட்சம் மதிப்பில் 246 பயனாளிகளுக்கும், அந்தகுழிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.137.40 இலட்சம் மதிப்பில் 377 பயனாளிகளுக்கும், வீரசின்னம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80.71 இலட்சம் மதிப்பில் 209 பயனாளிகளுக்கும், கோபால்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் 354 பயனாளிகளுக்கும், கோம்பைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.72.14 இலட்சம் மதிப்பில் 220 பயனாளிகளுக்கும், வி.குரும்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.12.66 இலட்சம் மதிப்பில் 36 பயனாளிகளுக்கும், கணவாய்ப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.49 கோடி மதிப்பில் 500 பயனாளிகளுக்கும், திம்மணநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.54.93 இலட்சம் மதிப்பில் 166 பயனாளிகளுக்கும், நத்தம் வட்டாரத்தில் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.84.15 இலட்சம் மதிப்பில் 169 பயனாளிகளுக்கும், உலுப்பகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.60.90 இலட்சம் மதிப்பில் 171 பயனாளிகளுக்கும், ஊராளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.45.30 இலட்சம் மதிப்பில் 89 பயனாளிகளுக்கும், லிங்கவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.96.26 இலட்சம் மதிப்பில் 310 பயனாளிகளுக்கும், சிறுகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.36.94 இலட்சம் மதிப்பில் 129 பயனாளிகளுக்கும், குட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.40.55 இலட்சம் மதிப்பில் 86 பயனாளிகளுக்கும், இராஜகோபாலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.27.53 இலட்சம் மதிப்பில் 120 பயனாளிகளுக்கும், செந்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.72.21 இலட்சம் மதிப்பில் 184 பயனாளிகளுக்கும், மங்களப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.18.64 இலட்சம் மதிப்பில் 42 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.16.42 கோடி மதிப்பில் மொத்தம் 4,524 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் வழங்கப்பட்டுள்ளது.

நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நத்தம் சட்டமன்ற தொகுதியில் கலைக்கல்லூரி, விவசாய விளை பொருட்களை சேமிக்க குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நத்தம் பேரூராட்சி பகுதியை மேம்படுத்த தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும். இங்குள்ள குப்பை கிடங்கு மேம்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்க தவறிவிட்டோமே என வருத்தப்படும் அளவிற்கு கழக ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்கள். அதன்படி, தமிழகத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசுக்கு உறுதுணையோடு இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

முன்னதாக சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், வேலம்பட்டியில் கூட்டுறவு நியாயவிலைக்கடை கட்டடத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும், நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை, 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பில் கடனுதவி ஆகியவற்றை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், சரக துணைப்பதிவாளர் திரு.சு.முத்துக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.விஜயன், லலிதாமோகன், முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. ஆண்டிஅம்பலம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.பழனியம்மாள் சுந்தரம், துணைத்தலைவர் திரு.ராமதாஸ், நத்தம் வட்டாட்சியர் திருமதி ம.சுகந்தி, நத்தம் வட்ட வழங்கல் அலுவலர் திரு.அண்ணாமலை, நத்தம் பேரூராட்சித் தலைவர் திரு.கே.எஸ்.எஸ்.பாட்சா, முக்கிய பிரமுகர்கள் தர்மராஜன், மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.