The Hon’ble Food Minister Function( Baby Shower)

செ.வெ.எண்:-03/2021
நாள்:-01.10.2021
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத் துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வேலு மஹால் மற்றும் ஒட்டன்சத்திரம் காமாட்சி கல்யாண மஹாலில் இன்று (01.10.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்துறையின் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் பெண்களை மையப்படுத்தியே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு பெண்களும் ஏதாவது ஒரு மக்கள் நலத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் நல வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசின் திருமண நிதியுதவி திட்டம், உயர்த்தபட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
சமுதாயத்தில் வாழும் அனைத்து மக்களும் சரிசமாக இருக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்களை போல சொத்துரிமை பெண்களும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றியதன் மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1928-ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் வைத்த கோரிக்கையை 1989-ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார்கள். அதேபோல், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 8-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவித் தொகை ரூ.5000 வழங்கும் திட்டத்தை முதன் முதலில் வழங்கியது கலைஞர் அட்சி காலத்தில்தான். அதன்பிறகு, இத்திட்டம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கல்லூரி படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவிகள் உயர்த்தப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் தொடங்கி வைத்தார்கள். உள்ளாட்சி தேர்தலில் பெண்களும் அதிக அளவில் போட்டியிடும் வகையில் 33 சதவீதம் இடஒதுக்கீடும், அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கியது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான். தற்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளார்கள். இந்த அரசு திட்டங்களால் பயன்பெறும் பெண்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தாரரையும், சுயமாக காப்பாற்றிக் கொள்ள முடியும். பெண்கள் சமஉரிமை பெற்று, தன்னம்பிகையுடன் செயல்பட வேண்டும். மேலும், முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, தமிழகம் முழுவதும் சென்று அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கும் காசோலைகளை வழங்கினார். பெண்கள் எல்லா விதத்திலும், சுய மரியாதை பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவியுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக 2035 குழந்தை மையங்கள் மாவட்ட முழுவதும் செயல்படுத்தபட்டு வருகின்றன. இக்குழந்தைகள் மையங்கள் மூலமாக சுமார் 13756 கர்ப்பிணிகள், 10841 பாலூட்டும் தாய்மார்கள், 92054 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். இவற்றில் தொப்பம்பட்டி வட்டாரத்தில் 122 குழந்தைகள் மையங்களில் 561 கர்ப்பிணிகள், 481 பாலூட்டும் தாய்மார்கள், 3969 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் 120 குழந்தைகள் மையங்களில் 626 கர்ப்பிணிகள், 443 பாலூட்டும் தாய்மார்கள், 3827 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள்.
பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை, தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கியமான நிகழ்வு, தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறப்பாகும். தாய்மை ஒரு பெண்ணுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஆனாலும், எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக் கருதுவதே இல்லை. பத்து மாதங்களும் தன் குழந்தையை சுமப்பதை ஒரு அலாதியான சுகமாகவே நினைக்கிறாள்.
கர்ப்பிணி தாய்மார்கள் தனது உடலையும், மனதையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வது, குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு உறுதுணையாக இருக்கும். கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது குழந்தைகளை சிறந்த முறையில் கல்வி பயில வைக்க வேண்டும். கல்வி மூலமே பல்வேறு வளர்ச்சிகளை அடைவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையை வழப்படுத்தி கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியில் 155 நபர்களுக்கும், ஒட்டன்சத்திரத்தில் 306 நபர்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.பழனிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி சி.பூங்கொடி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சு.சத்தியபுவனா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.P.T. தங்கம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் திரு.மோகன், தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.ஈஸ்வரி, குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.ரூ.போர்ஷியா ரூபா, திருமதி பழனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.