Close

The Hon’ble Food Minister Function ( Corana Relif Fund-2000) -Vadamadurai

Publish Date : 25/06/2021
.

செ.வெ.எண்:20/2021

நாள்:18.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பினை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சி, எரியோடு பேரூராட்சி, குஜிலியம்பாறை வட்டம், வடுகம்பாடி, வேடசந்தூர் வட்டம், நாகம்பட்டி ஊராட்சி ஜேனான்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று (18.06.2021) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப அவர்கள், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொன்னதை போல “சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற கோட்பாடுடன் செயல்படும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற அன்றைய தினமே தலைமைச் செயலகத்தில் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முத்தான 5 திட்டங்களுக்கான வாக்குறுதிகளுக்கு கையெழுத்திட்டு உடனடியாக நிறைவேற்றி உள்ளார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சராக மே 7-ந் தேதி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து தமிழகத்தில் இருக்கின்ற 2 கோடி 9 இலட்சம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4000 வழங்கும் திட்;டத்திற்கு அனுமதி வழங்கி, மே 10-ந் தேதி சென்னையில் முதல் தவணை ரூ.2000 வழங்கினார்கள். ஜீன் 3-ந் தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று இரண்டாவது தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களையும் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக, ஜீன் 15-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் கன்னிவாடியில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்து, நாள்தோறும் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் மகளிர்களுக்கு நகரப்பேருந்தில் கட்டணமின்றி பயணம், பால் விலை ரூ.3/- குறைப்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்தில் பிரசாரத்தின் போது “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற சுற்றுப்பயணத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தனித்துறை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய ஐந்து திட்டங்களையும் ஒரேநாளில் நிறைவேற்றியது மட்டுமன்றி பொதுமக்களின் தேவை அறிந்து ஒவ்வொரு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதோடு மாற்றுதிறனாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் உதவியாளர்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கான திட்டத்திற்கும் கையெப்பமிட்டார்கள்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளுக்கேற்ப ஏழை எளிய மக்களுக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆட்சி நடத்தி கொண்டியிருக்கிறார். வேடசந்தூர் பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவைகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் 07.05.2021-ந் தேதி அறிவிப்பின்படி, கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6,49,083 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000/-ம் வீதம் இரண்டாம் தவணையாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.129.81 கோடி ரூபாய் கொரனா வைரஸ் நிதி உதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 6,45,782 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.129.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணை தொகை ரூ.2000/- மற்றும் 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, ½ கிலோ சர்க்கரை, 500 கிராம் உளுந்தம் பருப்பு, 250 கிராம் புளி, 250 கிராம் கடலை பருப்பு, 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 200 கிராம் டீ தூள், குளியல் சோப்பு மற்றும் துணி சோப்பு அடங்கிய 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினையும் இலவசமாக வழங்கிட ஆணையிடப்பட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜுன் 2021 மாதத்தில் இரண்டாம் தவணையாக ரூ.2000/- வீதம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2274 குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டாவது தவணை ரூ.2000/- வீதம் ரூ.45.48 லட்சம் மற்றும் 14 வகை மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 31.1.2021-ந் தேதி பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் இச்சங்கத்தில் 123 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் 263 நபர்களுக்கு ரூ.1.43 கோடி தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் வட்டாரத்தில் செயல்படும் ஜேனன்கோட்டையில் 1149 குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டாவது தவணை ரூ.2000/- வீதம் ரூ.22.98 லட்சம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 31.1.2021-ந் தேதி பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் இச்சங்கத்தில் 41 பயனாளிகளுக்கு ரூ.0.45 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் 563 நபர்களுக்கு ரூ.2.64 கோடி தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குஜிலியம்பாறை வட்டாரத்தில் செயல்படும் வடுகம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைக்கப்பட்ட 3558 குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணை ரூ.2000/- வீதம் ரூ.71.16 லட்சம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 31.1.2021-ந் தேதி பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் இச்சங்கத்தில் 609 பயனாளிகளுக்கு ரூ.6.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் 1092 நபர்களுக்கு ரூ.4.74 கோடி தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திரு.முருகேசன், மேலாண்மை இயக்குநர் திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்