Close

The Hon’ble Food Minister Function ( Corana Relif Fund-2000)

Publish Date : 16/06/2021
Food

செ.வெ.எண்:12/2021

நாள்:15.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பினை வழங்கினார்.

ஆழியாறு பரம்பிக்குளம் குடிநீர் திட்டம் ரூ.630 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி வயலூர் பகுதியில் இன்று (15.06.2021) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பினை, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல் அறிக்கையில் கொரோனா தொற்றால் செயல்படுத்தபட்டுள்ள கட்டுபாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைவருக்கும் ரூ.4000/- வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜீன் மாதத்தில் ரூ.4196.38 கோடி செலவில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகைக்கான இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் ஜீன் மாதம் முதல் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில் 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, ½ கிலோ சர்க்கரை, 500 கிராம் உளுந்தம் பருப்பு, 250 கிராம் புளி, 250 கிராம் கடலை பருப்பு, 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 200 கிராம் டீ தூள், குளியல் சோப்பு மற்றும் துணி சோப்பு அடங்கிய 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6,49,083 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000/-ம் வீதம் இரண்டாம் தவணையாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.129.81 கோடி ரூபாய் கொரனா வைரஸ் நிதி உதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு,முதல் தவணையாக 6,45,782 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.129.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றிலிருந்து மீள்வதற்கு சவாலாக இருக்கிறது. இதிலிருந்து நம்மையும், மக்களையும், காப்பாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லை என்றாலும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மாதத்தில் (20.05.2021 மற்றும் 30.5.2021) இரண்டு முறை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு கூட்டங்களை நடத்தியதுடன், பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டதுடன், இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து, நலம் விசாரித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் போர்கால அடிப்படையிலான இதுபோன்ற நடவடிக்கைகளினால், தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

கொரோனா தொற்று உலக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக காவல்துறை பணியாளர்கள் உட்பட பல்வேறு முன்கள பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களின் பணியினை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை ரூபாய் 5000 வீதம் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

ஆழியாறு, பரம்பிக்குளம் குடிநீர் திட்டம் ரூ.630 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 17.06.2021 அன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்க உள்ளார். இப்பகுதி பொதுமக்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்தமைக்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்கள். அமைச்சர் என்ற முறையில் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களையும் கொண்டு வந்து தொகுதியை முதன்மையான தொகுதியாக உருவாக்குவேன் என்று மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், புஷ்பத்தூர் தாளையூத்து ஊராட்சி, கொழுமங்கொண்டான் ஊராட்சி, போதுபட்டி, மேல்கரைப்பட்டி ஊராட்சி, மேல்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி, கீரனூர், மரிச்சிலம்பு ஊரட்சி, பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்; வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திரு.முருகேசன், மேலாண்மை இயக்குநர் திரு.ராமகிருஷ்ணன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்