Close

The Hon’ble Food Minister issued Land patta

Publish Date : 25/06/2021
.

செ.வெ.எண்:19/2021

நாள்:18.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

ஏழ்மை நிலையில் வசித்த பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணையினை – மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், வேலாயுதம்பாளையத்தில் இன்று (18.06.2021) ஏழ்மை நிலையில் வசிக்கும் திரு.செல்வராஜ் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப அவர்கள், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிதரப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் வீடு இல்லாத ஏழ்மை நிலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கௌளப்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூர் வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிக்கு, ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது, திரு.செல்வராஜ் என்பவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் தகரத்தால் அமைக்கப்பட்ட கூடாரத்தில் ஏழ்மையில் வசித்து வருவதை காண முடிந்தது. தமிழக அரசின் திட்டத்தின்கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டி தருமாறு கோரிக்கை மனு அளித்தார். கடந்த ஆட்சியில் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற இயலவில்லை.

தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், திரு.செல்வராஜ் அவர்களின் கோரிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும், வீடு கட்டுவதற்கு அரசின் திட்டத்தின்கீழ் ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் உடனடியாக இம்மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் அடிப்படையில், திரு.செல்வராஜ் அவர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டுவதற்கான ஆணை இன்று (18.06.2021) வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் அரசு ஏழை, எளிய மக்களுக்காக செயல்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும்.
இதே போன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாமல் வசிக்கும் ஏழ்மையில் வாழும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்