Close

The Hon’ble Food Minister Program

Publish Date : 20/12/2021
.

...

செ.வெ.எண்:-52/2021

நாள்:19.12.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 2,410 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை சார்பில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், ஒட்டன்சத்திரம் கிறித்துவ பொறியியல் கல்லூரியில் இன்று(19.12.2021) நடைபெற்றது.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தின் தந்தை முத்தமிழறிஞர் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற துணையாய்த் தோழராய்த் தமிழக முன்னேற்றத்திற்காக 75 ஆண்டுகாலத்திற்கும் மேல் பணியாற்றிய இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று கல்லூரிப் பேராசிரியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, கல்வி அமைச்சராக, சுகாதாரத்துறை அமைச்சராக, நிதி அமைச்சராகப் பணியாற்றித் தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்குப் பாடுபட்டவர் பேராசிரியர். அவரின் பிறந்த நாளில் நம் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது இயற்கையிலேயே மிகவும் பொருந்திப் போகின்ற ஒன்றாகும்.

நம்முடைய தொகுதியில் கல்வியும், வேலைவாய்ப்பும் பெருகி இன்றைக்குப் பெரும்பாலோர் உயர்ந்து வளர்ந்ததற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர். நம் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கின்ற கொங்கு வெள்ளாளர்களை 1975 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே சேர்த்தார். அதற்கு அப்போதைய நம் சட்டமன்ற உறுப்பினர் தேவத்தூர் நாச்சிமுத்து அய்யா அவர்களும் மிகவும் பாடுபட்டார்கள். அதன் காரணமாக நிறைய டாக்டர்களும், பொறியாளர்களும், பேராசிரியர்களும், ஆசிரியர்களும், அரசு உயர் அலுவலர்களும் உருவாகி பலர் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குப் பணிக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டது. அதே போன்று இந்தப் பகுதியிலே அதிகம் வாழ்கின்ற அருந்ததியினர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3மூ உள் ஒதுக்கீட்டுக்கு 2007 ஆம் ஆண்டு நம் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் ஆணை பிறப்பித்தார்கள். அதனால் இன்றைக்கு அருந்ததியர் சமூகத்திலிருந்து பல டாக்டர்களும், அரசுப் பணியாளர்களும், ஆசிரியர்களும் உருவாகி இந்த சமூகம் மேம்பட்டு வருகிறது. இவ்வாறு கழக ஆட்சி அனைவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட விடாது தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

திமுக கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் 5 ஆண்டுகளில் 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்பதும் ஒன்றாகும். ஆதை நிறைவேற்றும் வகையில் இன்று ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடத்தப்படுவது போன்று தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1976 பேர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுபவர்களில் ஆண்களும், பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் சேர்த்து ஆக மொத்தம் 7020 பேர்கள் கலந்து கொண்டனர்கள். 2410 பேர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலை வழங்கும் பணி இன்றோடு முடிவதில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கும். பணி கிடைக்காதவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு அவர்களுக்கு பணி கிடைக்க முயற்சி எடுக்கப்படும். பணியை விரும்பாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் பணி கிடைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

அரசுப் பணியைத்தான் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். அற்காக ஒட்டன்சத்திரத்தில் IAS, IPS போன்ற அகில இந்தியப் பணிகளின் தேர்வுகக்கான பயிற்சி மையமும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தொகுதி I முதல் அனைத்துப் பணிகளின் தேர்வுக்கான பயிற்சி மையமும், IIT போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்திடும் மையமும் விரைவில் தொடங்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தமிழகத்தில் ஆரம்பித்து ஏழை, எளிய மகளிருக்கும் பெருமளவில் நிதியுதவி கிடைக்க காரணமாக இருந்தவர் நம் தலைவர் கலைஞர். அவர் வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தும் நம்முடைய மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் 6000 கோடி ரூபாய் அளவிற்கு 5 பவுனுக்கு நகைக்கடன் பெற்றவர்களின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளார். இதில் திண்டுக்கல் மாவட்;டத்தில் 51 கோடி ரூபாய் மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் சுமார் 147 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இப்படி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆட்சி நடத்தி வரும் நம் தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் கரங்களை வலுப்படுத்தி தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.76,500 மதிப்பில், மொத்தம் ரூ.16.06 இலட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரி வீல் சேர் ரூ.99999 மதிப்பீட்டில் ஆக மொத்தம் ரூ.17,06,499 மதிப்பீட்டில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், திண்டுக்கல் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் திரு.நா.சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திரு.ச.பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.சு.காமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி மு.ஜெயசீலி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி ஒட்டன்சத்திரம் கிறித்துவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.ஜோக்கப் தாமஸ் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.