Close

The Hon’ble Food minister-Tree plantation

Publish Date : 16/10/2021
.

.

செ.வெ.எண்:-34/2021

நாள்:-16.10.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுஇடங்களில் சிவப்பு மற்றும் உயர் ரக புளியமரம் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “மரத்தை நாம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும்” என்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொன்மொழிக்கேற்ப, தமிழகத்தின் பசுமை வெளிப்பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ஆணையிட்டுள்ளார்கள். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில், அந்தந்த கோயில் தலத்திற்கேற்ற வகையான தல மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடங்கி வைத்துள்ளார்கள். அதன்படி, தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குட்பட்ட உபகோயிலான ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வளாகத்தில் தல மரக்கன்றுகளை நடவு செய்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, கள்ளிமந்தையம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், திருப்பூர் அனிதா டெக்ஸ் காட் இந்தியா பிரைவேட் லிமிட் ஆகியவை இணைந்து, பொது இடங்களில் சிவப்பு மற்றும் உயர் ரக புளியமரம் நடும் திட்டத்தின் கீழ், சிவப்பு உயர் ரக புளிய மரக்கன்றுகளை நடவு செய்து, உயர் ரக புளியமரம் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி என்றும், தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதம் வனப்பகுதிதான் உள்ளது என்றும், எனவே, தமிழக வனப்பகுதி பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆணைக்கிணங்க, கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் அந்தந்த தலத்திற்கேற்ற வகையான தல மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடம்பம், மனோரஞ்சிதம், ஈட்டி, மாமரம், பாரிஜாதம், மகிழம், தென்னை, வன்னி, தேக்கு, சந்தன வேம்பு, நவா மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னும் 3 ஆண்டுகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்படும். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 3 மாதங்களில் 65,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கள்ளிமந்தையம் வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 50,000 மரக்கன்றுகளை, திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனம் நட்டு பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனம், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து பராமரித்து வருவது பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு ஊராட்சிக்கும் 30 அல்லது அவர்களுக்கு தேவைப்படும் சிவப்பு மற்றும் உயர் ரக புளிய மரக்கன்றுகள் வழங்கப்படும். அவற்றை அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் நட்டு பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதோடு மட்டும் இருந்துவிடாமல், அவற்றை தொடர்ந்து தண்ணீர் ஊற்றி, பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.

தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 21 கல்லூரிகளில், 3 கல்லூரிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. பரப்பலாறு அணை தூர்வாரப்பட உள்ளது. விவசாய விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட உள்ளது.

கள்ளிமந்தையம் – மஞ்சநாயக்கன்பட்டி இடையே ரூ. 40 கோடி மதிப்பிலும், கள்ளிமந்தயம் – பொருளூர் இடையே ரூ.45 கோடி மதிப்பிலும், வேலம்பட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. தும்மலப்பட்டி மற்றும் கேதேரி ஆகிய இடங்களில் 230 கேவி திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கீரனூர் பேரூராட்சி மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 1000 வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் 10 இடங்களில் விரைவில் தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், தேவைப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலைகள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சண்முகாநதியின் குறுக்கே மானூர் – வில்வாகம்பட்டி, பருத்தியூர் – பாலப்பட்டி இடையே பாலம், விருப்பாட்சியில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே பாலம், புளியநத்தத்தில் முத்தநாயக்கன்பட்டி – சுக்காம்பட்டி வரை மேம்பாலம் என பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும். புதிய குடிநீர் திட்டம் ரூ.630 கோடி மதிப்பில் வரவுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களை வரவழைத்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி, தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள். 5 மாதகால ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து, உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றியை அளித்து, பொதுமக்கள் கழக ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு கிடைத்த வெற்றியை பதவியாக கருதாமல், பொறுப்பாக கருதி பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

புளிய மர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதிக மகசூல் தரவல்ல உயர் ரக புளி மற்றும் சிவப்புப் புளி ரகங்களை கோவை, வன மரபியல் மற்றும் மரப்பெக்கு நிறுவனம்(IFGTB) தாவர இன மீட்பாய்வு மூலம் பாதுகாத்து, இதை பயிர் இனப்பெருக்கம் செய்து வருகிறது. சிவப்பு புளி என்பது அதிக சத்துக்கள் கொண்டதாகும். இதிலுள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி, மனித உடலில் அதிக நோய் எதிர்ப்புச் சக்தியை தரக் கூடிய ஆன்டிஆக்சிடென்ட் கொண்டுள்ளதால், நம்முன்னோர்கள் கோயில்களில் மட்டும் நட்டு பராமரித்து வந்தார்கள்.

இதில் உள்ள ஆந்தோசயனின் இயற்கை நிறமி சாய தொழிற்சாலைகளுக்கும், உணவு பதப்படுத்துதலுக்கும் உகந்தது. மேலும், ஆன்டிஆக்சிடென்ட்களும் மிகுதியாக உள்ளதால் ஆஸ்துமா, நீரிழிவு, இதய, சரும, கல்லீரல் மற்றும் புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ குணங்களை கொண்டுள்ளதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இச்சிவப்பு புளியை பொது இடங்கள், சாலை ஓரங்கள் மற்றும் பள்ளிகளில் நட்டு வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு எளிதில் நேரடியாக பயன் கிடைக்கும். இந்த சமூகப் பணியில் திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் நிறுவனமும், கோவை, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனமும் இணைந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊராட்சி மற்றும் பொது இடங்கள், நெடுஞ்சாலை ஓரங்களில் உயர் ரக மற்றும் சிவப்பு புளியன் மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொள்ள உள்ளன.

இந்த வகையான சிறப்பு புளி வகைகளை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (கோவை) இனம் கண்டு உயர் ரக நாற்றுக்களை உற்பத்தி செய்து, கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் நட்டு, பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையிலான திட்டத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய வகை புளி, இனத்தை கள்ளிமந்தையம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் அதிகளவில் நடும் திட்டத்தை திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனம், பிரத்யேகமாக முக்கியத்துவம் அளித்து வளர்த்து வருகிறது.

நிகழ்ச்சியில், திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிர்வாக இயக்குநர் திரு.அனிதா சேகர் வரவேற்புரையாற்றினார். வனப்பரப்பியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்(IFGTB) இயக்குநர் முனைவர் சி.குன்னிகண்ணன், வனத்துக்குள் திருப்பூர் திரு.குமார்துரைசாமி, அகில இந்திய புளி ஆராய்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்(கோவை) முனைவர் பி.நாகராஜன், வனப்பரப்பியல் மற்றும் வனப்பெருக்கு நிறுவனம் விஞ்ஞானி திரு.மாயவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.நா.நடராஜன், திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திருமதி அனிதா, ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் திரு.எம்.ரத்தினாம்பாள், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எஸ்.கிருஷ்ணசாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி ஆ.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி ஆர்.சத்தியபுவனா, துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.